பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான டோங்கோவில் கடந்த சனிக்கிழமை கடலுக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதன் காரணமாக, அந்த தீவு நாடு உட்பட சில நாடுகளில் சுனாமி பேரலைகள் எழுந்தன. எரிமலை வெடிப்பு, சுனாமி பேரலை பாதிப்பு என அடுத்தடுத்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தற்போதைய நிலைமையையும், அங்குள்ள மக்களின் நிலைமையும் உலக நாடுகளால் தெரிந்து கொள்ள முடியாத சூழல் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளது.
ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹா’பாய் எரிமலை வெடித்ததில் அந்த நாட்டில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள சுமார் 37 கிலோ மீட்டர் தூரம் தகவல் தொலைத்தொடர்பு இணைப்புக்கான கேபிள்கள் சேதம் அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேபிள்கள் சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிஜி தீவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதை சீர் செய்தால் மட்டுமே மீண்டும் அந்த நாட்டுக்கு தகவல் தொடர்பு இணைப்பு கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகளை சீர் செய்வதற்கு பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சிறப்பு கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. அனைத்தும் சரியாக சென்றால் இரண்டு வார காலத்திற்குள் கேபிள்களை சீரமைக்கலாம் என வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை சீரமைப்பது சவாலான காரியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.