கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி ரோட்டிலுள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சரவணம்பட்டி போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி முன்பு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒரு இளைஞரை பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டைச்சேர்ந்த செர்பின்ஸ் ( 32 ) என்பது தெரியவந்தது. மேலும் இவர் சின்னவேடம்பட்டி ரோட்டிலுள்ள கல்லூரியில் படித்ததும் படித்து முடிந்து நீண்ட நாட்களாக சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. அவருடைய பாஸ்போர்ட்டை டெல்லியைச் சேர்ந்தவர் வைத்திருந்ததாகவும், கடந்த ஆண்டே விசா முடிந்த நிலையில், ஓராண்டாக சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் கல்லூரி மாணவர்களைப் போல கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.