ஓலையக்கா பொங்கல்…

THE KOVAI HERALD

பொங்கல் என்றதும் உடனே நினைவுக்கு வருவது சர்க்கரைப் பொங்கல், கரும்பு, முறுக்கு, சீடை, அதிரசம் இப்படித்தான். அதையும் தாண்டி கலாச்சார, பண்பாட்டு ரீதியாக பார்த்தால் சங்கராந்திக்கு மார்கழி இறுதி நாள் படையல், பூளப்பூ, ஆவராம்பூ, வேப்பிலை தோரணங்கள் காப்புக்கட்டு. இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்கினால் பூப்பறிக்கிற நோம்பி. இளவட்டங்கள் ஒன்று கூடி ஆற்றுப்படுகைகளுக்கு சென்று பட்சினங்கள் சாப்பிட்டு, மகிழ்ச்சி பொங்க பாட்டுப்பாடி திரும்புதல். அதில் ஓலையக்கா கும்மி என்று ஒன்று இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்.
‘‘ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ…
தாழம்பு சித்தாடை.. தலைமேலயே முக்காடு.
பொட்டுன்னு சத்தம் கேட்டு புறப்பட்டாளாம் ஓலையக்கா…
ஓலே…ஓலே… !’
‘நாழி, நாழி நெல்லுக் குத்தி,
நடுக்கெணத்துல பொங்க வச்சு
கோழியக் குழம்பாக்கி… குத்து நெல்லும் சோறாக்கி,
கோழிக்கறி பத்தலையேன்னு கொதிக்கிறாளாம் ஓலையக்கா…
ஓலே.. ஓலே…!’
மார்கழி கடைசி நாள் காப்புக்கட்டு, சங் காரந்திக்கு பொங்கல். தை முதல் நாள் சூரியப்பொங்கல், இரண்டாம் நாள் கால்நடைகளுக்கான பொங்கல், மூணாம் நாள் காணும் பொங்கல் எனப்படும் பூப் பொங்கல். இளம் பெண்களுக்கான, இளைஞர்களுக்கான பொங்கல். மார்கழி மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் சாணப்பிள்ளையார் வாசலில் பிடித்து வைத்து, ஊர்க்கோடியில் உள்ள பிள்ளையாருக்கு சுற்றி வந்து தண்ணீர் ஊற்றி வரும் பெண்கள், இந்த சாணப்பிள்ளையாரை ஒவ்வொரு நாளும் சேகரித்து வைப்பர். அதை இந்த பூப்பொங்கல் அன்றுதான் ஒரு கூடையில் இட்டு, அதற்காக சர்க்கரைப் பொங்கல் வைத்து, இவற்றை தலையில் சும்மாடு கூட்டி வைத்து கொண்டு போய் ஊர்க்கோடியில் உள்ள ஓடும் நீர்நிலைகளில் கரைப்பர். இந்த சாணப் பிள்ளையாருடன் பைகளில் பொரி, கடலை, முறுக்கு, சீடை, அதிரசம் என பட்சணங்கள் நிறைந்து இருக்கும். இதை ஒவ்வொரு வீதியிலும் வைத்து சுற்றி வந்து பாட்டுப் பாடுவர். அதற்கான பாட்டுதான் இந்த ‘ஓலையக்கா கொண்டையிலே…!’
இதில் உச்சகட்டமாக சாணப்பிள்ளையாரை ஆற்றில் விடும்போது பாடல் ஒப்பாரியாகவே மாறி விடும்.
‘வட்ட, வட்டப் புள்ளாரே..
வடிவெடுத்த புள்ளாரே…
முழங்காலு தண்ணியில மொதக்கறியே புள்ளாரே… ஓலே.. ஓலே…!
‘ஓலையக்கா கொண்டையில..
ஒரு சாடு தாழம்பூ..
தாழம்பூ சித்தாடை, தலைநிறைய முக்காடு ஓலே… ஓலே….
நாழி நாழி நெல்லுக்குத்தி, நடுக்கெணத்துல பொங்க வச்சு,
பொட்டுன்னு சத்தம் கேட்டு, புறப்பட்டாளாம் ஓலையக்கா…
ஓலே… ஓலே…!’
‘மஞ்ச அறுபதும்பா..மைகோதி முப்பதும்பா.
மஞ்சள் குறைச்சிலின்னு மயங்குறாளாம் ஓலையக்கா..
சீலை அறுபதும்பா, சித்தாடை முப்பதும்பா..
சீலை குறைச்சல்ன்னு சிணுங்கறாளாம் ஓலையக்கா…!’
கோவை மாவட்டத்தில் கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், பல்லடம், வேப்பங்கொட்டப்பாளை யம், மெட்டுவாவி போன்ற கிராமங்களில்40 ஆண்டுகளுக்கு முன்னால் ஒவ்வொரு வருடமும் தைப் பொங்கலுக்கு பொங்கல் சர்க்கரைப் பொங்கல் இருக்குமோ இருக்காதோ, இந்த ஓலையக்கா பொங்கல் நிச்சயம் இருக்கும். அதிகாலை நேரத்தில் கோழி கூவும் நேரத்தில் ஒலிக்கும் ஓலையக்கா பாடல் நடு மதியம் கூட உச்சஸ்தாயியில் கிராமங்களில் இசை கூட்டும். இப்போதெல்லாம் ஓலையக்கா மருந்துக்கும் கூட காணோம். ஒயிலாட்டம், கும்மியாட்டம், பொய்க்குதிரையாட்டம், கரகாட்டம் போன்ற பழம்பெரும் கலை களை மீட்டெடுத்து வரும் பொதுநல, பண்பாடு, கலாச்சார மையங்கள் இதையும் வருங்காலங்களில் புத்துயிர்ப்பு பெற வைத்தால் பாரம்பர்ய பண்டிகையான தைப் பொங்கல் திருநாள் இன்னமும் கலை கட்டும்.

scroll to top