ஓர் அறைக்குள் இரண்டு பேஷின்கள் வந்தது எப்படி? கோவை மாநகராட்சி கட்டிய நவீன கழிப்பிடத்தின் புதிய பின்னணி

sads-copy.jpg

THE KOVAI HERALD

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது தனி மனிதனுக்கு மட்டுமல்ல, அரசு நிர்வாகத்திற்கும் பொருந்தும் போலிருக்கிறது. அப்படி சொல்ல வைத்திருப்பது கோவை அம்மன்குளம் ராஜிவ்காந்தி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம். பொதுவாக பொதுக்கழிப்பிடங்களில் மலம் கழிக்க பயன்படுத்தப்படும் டாய்லெட்டுகளில் ஒற்றை அறையில் ஒற்றை பேஷன்கள்தான் வைப்பது வழக்கம்.

ஆனால் இங்கே ஒரு அறையில் இரண்டு பேஷின்கள் வைத்துள்ளார்கள் இது 20 ஆண்டுகளுக்கு முன்பு டாய்லெட் கட்டும்போதே நடந்துள்ளது இது இப்போதுதான் ஏதோ ஒரு மீடியாக்காரரின் பார்வைக்கு வர, அதை தனது சேனலில் எடுத்து ஒளிபரப்பி விட்டார். அவ்வளவுதான் இது தமிழகமெங்கும் மட்டுமல்ல, உலகமெங்கும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விட்டது. ஒரு அறையில் எப்படி இரண்டு பேர் அருகருகே அமர்ந்து டாய்லெட் போக முடியும். அதுவும் ஆண்- பெண் பயன்படுத்தும் பொதுக்கழிப்பிடத்தில் இப்படியுமா கட்டுவார்கள் என்றெல்லாம் கேள்விகள் எழும்பின. வலைப்பதிவர்கள் இதற்கு மீம்ஸ் கிரியேட் பண்ணி உலகம் முழுக்க சிரிப்பாய் சிரிக்க விட்டனர். இதனால் யூட்யூப் உள்ளிட்ட இதர சேனல்களின் படையெடுப்புகள் அன்றாடம் இங்கே நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இது என்னடா கோயமுத்தூருக்கு வந்த சோதனை என்று பொதுஜனங்களும் இதை வந்து பார்த்துச் சென்ற வண்ணம் இருந்தனர். இந்த சூழ்நிலையில்தான் கோவை மாநகராட்சி அதிகாரிகள் கீழ்கண்ட விளக்கம் தந்துள்ளனர்.

“அந்தக் கழிப்பிடம் 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில், சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதால் கதவுகள் பொருத்தப்படவில்லை. இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்”

இந்த விளக்கம் வந்தாலும் மக்களிடையே இந்த டாய்லெட்டை ஒட்டி எழும் கிண்டல்கள் அடங்குவதாய் இல்லை. இதன் உச்சபட்சமாக ‘இதுதான் புதுமாடல், திராவிட மாடலும் இதுதான்!’ என்று இத்தொகுதி எம்.எல்.ஏ பாஜக வானதி சீனிவாசன் கிண்டல் ததும்ப பேட்டியும் அளித்தார். உண்மையில் இந்த டாய்லெட் விஷயத்தில் நடந்தது என்ன? 1996-2001 வரை கோவை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த ஒருவரிடம் பேசினோம்.

‘‘இது ஒரு பெரிய விஷயமேயில்லை. டாய்லெட் கட்டறது ஒரு காண்ட்ரெக்ட் எடுத்திருப்பான். செங்கல் சப்ளை இன்னொருத்தன் ஒப்பந்தம் போட்டிருப்பான். இந்த பீங்கான் செட் வாங்கித் தர்றதுக்கு வேறொரு கம்பெனி ஒப்பந்தம் போட்டிருக்கும். அவங்க எல்லா டாய்லெட்டுக்கும் அதை சப்ளை பண்ணும்போது இங்கேயும் வந்திருக்கும் இங்கே டாய்லெட் எட்டு அறைன்னு கணக்கு கொடுத்திருப்பாங்க. ஆனால் நான்கு அறைதான் கட்டப்பட்டிருக்கும். இந்த பேஷன் கணக்கு எப்படி வரும்ன்னு புரியாம மேசன் பார்த்திருப்பார். இஞ்சினியர் ஓர் அறையில் ரெண்டு பேஷன் வச்சுக் கட்டுன்னு சொல்லியிருப்பார். அவரும் கட்டியிருப்பார். இல்லை அந்த டாய்லெட் வேலை செஞ்சவன் ஃபுல் மப்புல இருந்திருப்பான். வேலை ரொம்ப நாள் இழுத்தடிச்சிட்டு இருந்திருக்கும். போதையில் இவனும் ஒண்ணுக்கு ரெண்டா வச்சுட்டுப் போயிருப்பான். இந்த மாநகராட்சி ஒப்பந்த அரசியல் கமிஷன்ல இதெல்லாம் சகஜம்தான் சார்!’’ என்றார்.

S.KAMALA KANNAN Ph. 9244319559

scroll to top