விமான ஓடுதள புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் காரணத்தால் இந்த மாதம் தொடக்கப்படவிருந்த கோவை- கோவா உள்ளிட்ட அனைத்து நள்ளிரவு விமான சேவைகளும் டிசம்பர் மாதம் இறுதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக அனைத்து விமான நிலையங்களிலும் விமான ஓடுதளம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுவது வழக்கம். கோவை விமான நிலையத்தில் இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதனால் இரவு 10 முதல் அதிகாலை 6 மணி வரை விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை – கோவா இடையே இந்த மாதம் 30-ம் தேதி முதல் நள்ளிரவு விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது.
இந்நிலையில் விமான ஓடுதள புனரமைப்பு பணிகள் தொடரும் காரணத்தால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை விமான சேவை கோவையில் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாதம் முதல் கோவை – கோவா உள்ளிட்ட நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில விமான சேவை தொடங்க தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டன. அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில சேவைகளுக்கு டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது.
விமான நிலையத்தில் ஓடுதள புனரமைப்பு பணிகள் தொடரும் காரணத்தால் டிசம்பர் மாத இறுதி வரை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விமான சேவை வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். திட்டமிட்டபடி பணிகள் முடிந்துவிட்டால் ஜனவரி முதல் கோவை விமான நிலையத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலும் விமான சேவை வழங்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓடுதள புனரமைப்பு பணியால் கோவா உள்ளிட்ட அனைத்து இரவு விமான சேவை டிசம்பர் வரை ரத்து

Air Vehicle, Commercial Airplane, Flying, Clouds