THE KOVAI HERALD:
நாளுக்கு நாள் வலுவடை யும் ஓபிஎஸ் – இபிஎஸ் ‘ஒற்றைத் தலைமை’ யுத்தத்தால் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் எந்த அளவு பாதிக்கும். இதுதான் தமிழக அரசியல் வானில் வழக்காடு மன்றமாகவும், பட்டிமன்றமாகவும் இல்லாமல் விவாதிக்கப் பட்டு வரும் டாபிக். இதில் பலரும் மிகவும் பாதிக்கும் என்ற தரப்பிலேயே பெரும் பாலோர் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியல்ல என்பது அதிமுகவின் வரலாற்றை பார்ப்பவர்களுக்கு உண்மை புரியும்.
திமுகவில் கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதலில் அதிலி ருந்து பிரிந்து எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கினார். அதே வேகத்தில் திண்டுக்கலில் நடைபெற்ற முதல் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.
அதில் நம்பிக்கையும் உற்சாகமும் பெற்ற எம்ஜிஆர் 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை சந்தித்து ஆட்சியைக் கைப்பற்றினார். எம்ஜிஆர் இருந்த காலத் திலேயே அவருடன் நெருக்கமாக இருந்த எஸ்டிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் நமது கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி தராசு சின்னத்தில் போட்டியிட்டு தோற்றது.
1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பின பின்பு அவர் அழைப்பை ஏற்று எஸ்.டி.எஸ் நமது கழகத்தை அதிமுகவுடன் இணைத்தார். அதன்பிறகும் எஸ்டிஎஸ் அதிமுக அரசி யல் அமைச்சர் பதவிகள் வகித்தார். 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவின் பின்னணியில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிளவுபட்டது. சட்டசபையில் வரலாறு காணாத ரகளை ஏற்பட்டது. ஆட்சி கவிழ்ந்தது.
அன்று அதிமுக இரண்டாகப் பிளவுபட்டு தேர்தலை சந் தித்ததில் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெ அணி சேவல், ஜா அணி இரட்டைப்புறா சின்னத்தில் போட்டியிட்டது அதில் இரட்டைப்புறா இரண்டு இடங்களே பெற்று படுதோல்வி அடைய, ஜெ அணி 27 இடங்கள் பெற்று தானே அசலான அதிமுக அணி என்று பொதுவெளிக்கு உணர்த்தியது.
இதன் பின்னணியில் கட்சியை ஜெயலலிதாவிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டு ஒதுங்கினார் வி. என்.ஜானகி. பின்னர் காலமானார். அதன் பிறகு திமுக ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தேர் தல். அதிமுக வெற்றி ஜெயலலிதா முதல்வர் ஆனார். அதன் பிறகு ஜெ மந்திரிசபையில் இருந்த ஆர்.எம். வீரப்பனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் கட்சியை விட்டே வெளி யேற்றப்பட்டார்.
அவர் எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி னார். திமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல்களை சந்தித்தார். இதற்கிடையே 1990-ஆம் ஆண்டு ஜெ அணியில் இருந்த எஸ்.திருநாவுக்கரசு அவருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து தனித்துப் போய் அண்ணா புரட்சித்தலைவர் முன்னேற்றக்கழகம் என்றொரு கட்சியை தொடங்கினார்.
1991-ஆம் ஆண்டு அவர் கட்சியில் அவரும், கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனும் வெற்றி பெற்றனர். திரு நாவுக்கரசன் 1996-ல் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். பிறகு நீக்கப்பட்டார். பின்னர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். கடந்த 2004 ஆம் ஆண்டு அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத் தலைவரானார். தற்போது திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பியாக உள்ளார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு தொடங்கி 2016 ஆம் ஆண்டு இறுதி வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே தொடர்ந் தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர்தான் முதலமைச்சரும் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதியில் தியானம். அவர் தொடங்கிய தர்ம யுத்தம், ஜெயலலிதா, சசி கலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு என அடுத்தடுத்து நிகழ்ந்த திருப்பங்கள்
இப்போது எடப்பாடி, பன் னீர் செல்வம் பொதுக்குழு கூட்டத்தை விட அதிரடி கிளப் பின. அதில் சிறைசெல்லும் நிலை வந்த பின்பு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக சசிகலா முன்னிலையில் தேர்வு செய்தார்கள் பெரும்பான்மை அதிமுக எம்.எல்.ஏக்கள். இதற்குப் பிறகு எண்ணி சில மாதங் களில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைப்பு, சசி கலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கம். தினகரன் அமமுக என்கிற புதிய கட்சி என்று அதிமுக அரசியல் களம் மிகுந்த பரபரப்புக்கு மாறி யது. அப்போதெல்லாம் திமுக மட்டுமல்ல, இதர எதிர்கட்சிகளும் அதிமுக உடைந்து விடும். சட்டசபை கலைக்கப்படும். இரட்டை இலை முடக்கப்படும். அடுத்து வரும் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெறும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு.
எடப்பாடி பழனிசாமி தலை மையில் வலுவாகவே ஆட்சியாண்டார்கள். சுமார் நான்கரை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகள் வந்தாலும் மத்தியில் உள்ள பாஜக அரசிடம் படு இணக்கம் கொண்டு ஆட்சியை நகர்த் தினர். இதற்காக எடப்பாடி தலைமையிலான அரசை அடிமை அரசு என்று உச்சபட்ச விமர்சனம் செய் தார்கள். இங்கே வீரியம் முக்கியமல்ல; வீரியமே முக்கியம் என்று பீடு நடை போட்டது எடப்பாடி அரசு.
2021 தேர்தல் வந்தது. இப்போது மக்களிடம் வீரியத்தை இழந்து விடும். ஸ்டார் கட்சி. ஸ்டார்கள் இல்லாததால் கடுமையான தோல்வியை சந்திக்கப் போகிறது. போதாக்குறைக்கு தமிழகத் தில் நோட்டா கணக்கிற்கு கூடத் தேறாத ஓட்டு வங்கியை வைத்துள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதனால் இக்கூட்டணி ஸ்வீப் தோல்வியை சந்திக்கும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எது வும் நடக்கவில்லை. பாஜக விற்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்து கூட்டணியில் 70 இடங்களை வலுவாக கைப் பற்றி அமர்ந்து விட்டது.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் யார் எதிர்கட்சித்தலைவர் என்ற பிரச்சனை வந்தது. அதிலும் எடப்பாடியாரின் கையே ஓங்கியது. இதற்கிடையே சசிகலா சிறையிலிருந்து தண்டனை முடிந்து வெளியே வந்த காலத்தில் அவரே பொதுச் செயலாளர் கட்சியைக் கைப்பற்றிக் கொள்வார் என்றெல்லாம் பேச்சு நடந்தது. அதுவும் புஸ்வானம் ஆனது.
இது எல்லாம் ஓபி எஸ்ஸை கட்சி ஒருங்கிணைப்பாள ராகவும், இபிஎஸ்ஸை கட்சி இணை ஒருங்கிணை ப்பாளராகவும் கொண்டு ஆக்கப்பட்ட ஆக்க பூர்வமான செயல்பாடுகள். தினகரன் அப்படி இப்படி எம்பிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இந்த சூழ்நிலையில்தான் கட்சிக்கு ஒற்றைத் தலைமை பேச்சு ஓங்கி ஒலித்தது.
அதற்கு தகுதியான ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்ற நிலையில் எம்.எல்.ஏக்கள், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் ஏகோபித்து உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இரட்டைத் தலைமைதான் என்று உறுதிப்பாட்டுடன் போராடி வந்தார். கோர்ட்டுக்குப் போனார். ரகளைகள் செய்து பார்த்தார். ஒன்றும் எடுபடவில்லை.
இப்போது பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செய லாளராக தேர்ந்தெடுத்து விட்டார்கள்.இதே நேரத்தில் கட்சி அலுவலகத்தில் நுழைந்து கதவுகளை உடைத்து சேதம் செய்து, அதனுள் இருந்த ஆவணங்களை எல்லாம் எடுத்துச் சென்றிருக்கிறது ஓபிஎஸ் அணி. அவரே கட்சித்தலைமை அலுவல கத்திற்கு ரவுடிகள் புடைசூழ வந்ததை எந்த ஒரு அதிமுக தொண்டனும் ரசிக்கவில்லை.
மேலும், அதிமுக நிர்வாகி களின் கோரிக்கையை ஏற்று ஓ.பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது பெரும் கொதிப்பையே வெளிப் படுத்தினர்.
‘‘எம்ஜிஆர் தன் ரத்தம் வியர்வை சதை என உருவாக்கி வளர்த்த இயக் கம். அதை ஜெயலலிதா தன் அத்தனை ஆற்றல்களையும் பயன்படுத்தி கட்டியாண் டார். அப்படியான தலை மையிடம் ஒரு கோயிலுக்கு சமானம். அந்த இடத்தில் உருட்டுக்கட்டைகள் ஆயுதங்களுடன் வந்து சொத்துக்களை உடைத்து நொறுக்கியது. அங்கே இருந்த ஆவணங்களை தூக்கிச் சென்றது எதுவுமே ஒரு அடிமட்டக் கட்சித் தொண்டன் கூட செய்யமாட்டான். அப்படிப்பட்ட காரியத்தை மூன்று முறை முதல்வராக இருந்த, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் செய்தி ருக்கிறார். அதை எம்ஜிஆர். ஜெயலலிதா ஆன்மாக்களே மன்னிக்காது என்று ஒவ்வொரு தொண் டனும் கூவிக் கொண்டிருக்கிறார் கள். இதற்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும்.
அவர் உண்மையிலேயே பழுத்த அரசியல்வாதியாக இருந்திருந்தால் ஒன்று அம்மா சமாதியில் போய் ஏற்கனவே அமர்ந்த மாதிரி தியானத்தில் அமர்ந்து கண்ணீர் உகுத்திருக்கலாம். அல்லது பொதுக்குழுவிற்கே வந்ததிருக்கலாம். அங்கே அவருக்கு எதிரானவர்கள் இருந்திருந்தால் கூட அவர்கள் சோடாபாட்டில் சைக்கிள் செயின் வீசி யிருந்தால் கூட அந்த அடியை வாங்கிக் கொண்டு தியாகி போல வந்து அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம். அங்கேயே அத்தனை பேர் மத்தியில் என்னை ஏன் இப்படி செய்கிறீர்கள். நான் என்ன தப்பு செய்தேன் என்று நல்லபிள்ளையாக நியாயம் கேட்டிருக்கலாம். அவர் இமேஜ் எங்கேயோ சென்றிருக்கும். அதுவும் இல்லை. இதுவும் இல்லை. இருக்கும் பொருளாளர் பதவியை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்திருக்கலாம்.
இதன் விளைவு. நாடே இவர் செய்த அலப்பரையைப் பார்த்து அல்லோல கல்லோலப் பட்டிருக்கிறது. ரொம்பவுமே தன் பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டார். ஏற்கனவே எத்தனையோ பொதுக்குழு, செயற்குழு நடந்திருக்கிறது. எஸ்.டி.எஸ், நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன் காலத்தி லிருந்து உட்கட்சிப் பிரச் சனை நடந்திருக்கிறது. இவ்வளவு ஏன் தினகர னுக்கும் கட்சிக்கும் கூட ஏகப்பட்ட மோதல் நடந்திருக்கிறது. இப்படி யாருமே பொதுவெளியில் சண்டை போட்டு அம் பலப்படவில்லை. அதி லும் தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டி ருக்கிறார். இதன் மூலம் இபிஎஸ்ஸின் இமேஜ்தான் உயர்ந்திருக்கிறதே ஒழிய வேறொன்றும் நடக்கவில்லை. இதன் மூலம் என்னதான் தேர் தல் கமிஷனில் புகார் கொடுத் தாலும் ஓபிஎஸ் தரப்பு ஜெயிக்கப் போவதில்லை!’’ என்றனர் நம்முடன் பேசியவர்கள்.
இது பற்றி அதிமுக சாராத நடுநிலையாளர்கள் சிலரி டம் பேசினோம். இந்தப் பொதுக்குழு யுத்தத்தால் அதிமுகவின் பலம் சரிந்திருக்கிறதா? இரட்டை இலை முடக்கப்படுமா? தேர்தல் கமிஷன் என்ன முடிவு எடுக்கும். பாஜக, திமுகவின் நிலைப்பாடு இதில் எப்படியெல்லாம் இருக் கும் என்பது பற்றியெல்லாம் சொன்னார்கள். அது இதுதான்:
‘‘இரண்டு தரப்புமே தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளன. இன்னமும் கோர்ட்டுக்கு போகும் வாய்ப்புகள் தென்படுகின்றன. நீ தாக்கு நான் தாக்கு என்கிற ரீதியில் அடித்துக் கொள்ளும் நிலையில் இரட்டை இலை முடக்க முயற்சிகள் நடக்கும். ஆனால் அதற்கு பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து வேண்டும். அதை விட முக்கியம் தேர்தல் கமிஷன் இதைச் செய்ய வேண்டுமானால் தற்போதுள்ள எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் கையொப்பம் வேண்டும். அதற்கு ஓபிஎஸ் மக னைத் தவிர வேறு யாரும் சேருவதாகத் தெரிய வில்லை. எனவே அதிமுக தரப்பில் ஓபிஎஸ் அதற்கான ஆவணங்களை சமர்பிக்க வாய்ப்பே இல்லை. அவருக்காக அடிமட்டத் தொண்டர்கள் கூட செல்ல மாட்டார்கள். அடுத்தது திமுகவிற்கு ஓபிஎஸ் ஒரு பொருட்டில்லை. அந்தக் கட்சிக்கு இரட்டை இலை பிரம்மாண்டம். அதை முடக்க எந்த வேலையையும் செய்யும். அதை செய்ய வேண்டுமானால் முழுமையாக பாஜகவின் தயை வேண்டும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை காங்கிரஸ் தன் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் தெரியவில்லை. எனவே மோடி பிரம்மாண்டமாய் நிற்கிறார். இதை நம்மை விட திமுக நன்றாகவே உணர்ந்துள்ளது. இப்படியான சூழலில் GST வகையறா உட்பட அத்தனை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் பிஜேபி அரசுடன் இணக்கம் அவசியம். பாஜகவுடன் திமுக கூட்டணி சேருவது புதிதில்லை. மோடியுடன் கூட்டணி அமைப்பது மட்டுமே புதுசு. வாஜ்பாய், அத்வானி, மோடியானாலும் இயக்குவிப்பது சங்பரிவார் மட்டுமே. திமுக தன் அரசியல் தொழிலை செவ்வனே செய்வதற்கு வருமானத்திற்கு நிறைய திட்டங்கள் தேவை. அதற்கு மத்திய தொகுப்பிலிருந்து நிதி தேவை.
எனவே எந்த சூழலிலும் அதன் பார்வை டெல்லியை நோக்கியே இருக்கும். இல்லாவிட்டால் 2024-ல் மக்களவைத் தேர்தலில் சில சீட்கள் ஜெயித்தாலும் 2026 -ல் தமிழகத்தில் தன் ஆட்சியை திமுக தக்க வைப்பது கஷ்டம். அந்த அளவுக்கு தற்போது அதிமுக எடப்பாடியின் விஸ்வரூபம் இந்தப் பொதுக்குழுவில் காட்சிப்பட்டு உள்ளது. எனவே இந்தப் பொதுக்குழு கச்சைக்கட்டு அதிமுகவை பலஹீனமாக்கியிருக்கிறது என்ற கருத்துக்கே இடமில்லை. சுருக்கமாகச் சொன்னால் முன்னை விட அதிமுக பலம் பெற்றிருக்கிறது. அதன் அடிமட்டத்தொண்டர் ஒவ்வொருவரும் இப்போது எடப்பாடி தலைமையில் கட்சியைக் காப்பாற்ற சூளுரைத்து விட்டனர் என்பதையே காட்டுகிறது இப்போது நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள்!’’
S.KAMALAKANNAN Ph.no.9244317182