இந்தியாவிலிருந்து – துபாய்க்கு வாரந்தோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், கோவை துபாய் இடையேயான விமானப் போக்குவரத்துக்கு தொடங்க வழி கிடைக்கும். துபாய்க்கு நேரடியாக கோவையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டால், தொழில்துறையினர் அமோக வளர்ச்சி காண்பார்கள்.
பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், கோவை – துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
தற்போது, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, ஷார்ஜா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு மட்டுமே விமான சேவை உள்ளது. இதில் இலங்கைக்கு வழங்கப்பட்ட விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு வெளிநாடுகளுக்கு மட்டுமே நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
பல வெளிநாடுகளுக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், துபாய்க்கு நேரடியாக விமான சேவை துவக்கப்பட வேண்டும் என பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அது இன்று வரை சாத்தியப்படவில்லை. தொழில்துறை அமைப்புகள் சார்பில் துபாய் நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனங்களிடமும், மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சரிடமும் பல முறை கோரிக்கைவிடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
துபாய்க்கு இந்தியாவில் இருந்து வாரந்தோறும் 65 ஆயிரம் வீதம் 1,30,000 இருக்கைகள் (வருகை/ புறப்பாடு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கேற்ப துபாய்க்கு அதிக வரவேற்பு உள்ள விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை -துபாய் இடையே விமான சேவை தொடங்க (பைலேட்ரல் ஒப்பந்தம்) கடந்த 2006-2008-ம் ஆண்டு காலகட்டத்தில் உரிமம் பெறப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கலாம். கோவை -துபாய் இடையே விமான சேவை தொடங்க தொழில் அமைப்பு நிர்வாகிகள் முதலில் விமான சேவை தொடங்கினால் லாபகரமாக இயக்கலாம் என்பதை அந்நாட்டு விமான நிறுவனத்துக்கு புரிய வைக்க வேண்டும்.
மறுபுறம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வேறு விமான நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துபாய் நாட்டுக்கான இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்து, கோவைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இல்லையெனில் இந்தியாவிலிருந்து – துபாய்க்கு வாரந்தோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே கோவை -துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்க வாய்ப்பு ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
‘7 மாவட்ட பயணிகள் பயன்பெறுவர்’
கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) இயக்குநர் நந்தகுமார் கூறுகையில்,
அமைப்பு சார்பில் ஏற்கெனவே ‘பிளை துபாய்’ நிறுவனத்துடன் பேச்சு நடத்தியுள்ளோம். இந்திய அரசு துபாய்க்கு ஒதுக்கீடு செய்துள்ள வாராந்திர சீட்டுக்களின் எண்ணிக்கையை அதிகாரித்தால் மட்டுமே கோவை -துபாய் இடையே விமான சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என உறுதியாக கூறிவிட்டனர். கோவை உள்ளிட்ட சுற்றுப்புற 7 மாவட்ட பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு விரைவில் துபாய்க்கு ஒதுக்கீடு செய்துள்ள இருக்கைகள் எண்ணிக்கையை உயர்த்தவும், கோவை -துபாய் இடையே விமான சேவை தொடங்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.