எஸ்.பி.வேலுமணி vsசெந்தில்பாலாஜி அதிமுகவின் எஃகுக் கோட்டை அசைக்க பார்க்கும் கோவை திமுக

கோவையில் பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திங்களன்று கோவை வந்தார். அன்று வ.உ.சி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் 587. 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அவ்விழாவில் முதல்வர் பேசும்போது, ‘‘கோவை பீளமேடு வீமானநிலையத்திலிருந்து வந்தேன். வரும் வழியில் என்னை வரவேற்க மக்கள் வெள்ளம். அவர்களை நீந்திக்கடந்த வரவே 3 மணி நேரம் பிடித்தது!’’ எனச் சொல்லி புளகாங்கிதப் பட்டிருக்கிறார். அத்தோடு கோவையின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜியின் செயல்பாட்டை வானளாவப் புகழ்ந்தார். முதல்வருக்கு முன்னதாக
அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, ‘‘கோவையில் 150 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டன. இதில் பொதுமக்களிடம் இருந்து 1.41 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏறத்தாழ 25 ஆயிரம் கோரிக்கை மனுக்களுக்கு இவ்விழாவில் தீர்வு காணப்படுகிறது. கோவை நமது கோட்டை. கோவை தமிழக முதல்வரின் கோட்டை!’’ என்றே வர்ணித்தார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் ஸ்டாலினின் இந்த பயணம் மட்டுமல்ல, செந்தில்பாலாஜியின் இந்தப் பேச்சும், முதல்வரின் புளகாங்கிதமும் கோவை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘‘கிட்டத்தட்ட 2001 முதலே தொடர்ந்து 20 ஆண்டுகளாக நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களில் கடுமையான தோல்வியை சந்தித்து வரும் திமுக -குறிப்பாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் 10-க்கு 10 இடங்களில் அதிமுக கூட்டணியிடம் தோல்வியுற்ற திமுக எப்படி கோயமுத்தூரைக் கோட்டையாக்கும். ஒரு வேளை வரும் உள்ளாட்சித் தேர்தலில் வென்று மேயர் பதவியை பிடித்தால் மட்டும் அவர்களுக்கு கோவை கோட்டையாகி விடுமா?’’ என்று பெரிய விவாதமே கோவை அரசியல் நோக்கர்கள் மத்தியில் நடந்து வருகிறது.
அதை விட முக்கியமாக, ‘‘கோவைக்கு ஒரு எம்.எல்.ஏ இல்லை. அதனால் அமைச்சர்களும் இல்லை. ஏற்கனவே கோவைக்கு அரசு ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பொறுப்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் எ.வ.வேலு, சக்ரபாணி, இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளூர் திமுகவினர் மற்றும் அரசு அலுவலர்கள் மூலம் வந்த பல்வேறு புகார்கள் காரணமாக அப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு இதன் பொறுப்பு அமைச்சராக கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். அவர் இப்படி நியமனம் செய்து ஒரு மாத காலம்தான் கடந்திருக்கிறது. அதற்குள் என்ன பெரிதாக சாதித்து விட்டார். எப்படி கோயமுத்தூர் அவர்கள் கோட்டையாக மாறும்?’ என உணர்ச்சி மேலிட பேசுகிறார்கள் கோவை அதிமுகவினர்.
அவர்கள் சிலரிடம் பேசியபோது திமுக கோவையின் கோட்டையாக மாற வாய்ப்பே இல்லை என்பதற்கு நிறைய புள்ளி விவரங்களை அடுக்கினார்கள். அது பின்வருமாறு:
‘‘செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்தவர். அமைச்சராக இருந்தபோதே பல்வேறு புகார்கள் கட்சியினராலேயே வைக்கப்பட்டவர். கரூரில் விஜயபாஸ்கரையே அசைத்துப் பார்த்து திமுகவிற்கு 3 தொகுதிகளை வெற்றிக்கனியாக பறிக்கத் தந்தவர். அரசியலில் கடின உழைப்பாளி. குறிப்பாக அவர் வாக்காளர் பூத் கமிட்டிகளை அமைப்பதில் தனி கவனம் செலுத்துவார். ஒரு பூத்துக்கு 12 பேர் கொண்ட குழுவை உருவாக்கி, பூத் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வாட்ஸ் அப் குழுக்களை ஏற்படுத்தி ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அப்டேட் செய்ய சொல்வார். அதற்கென அமைக்கப்பட்ட ஒரு டீம் அவர்களிடம் தொடர்ந்து உரையாடி நிலைமையை கேட்டறிந்து விஷயத்தை அமைச்சருக்கு விளக்கும்.
ஒரு தொகுதிக்கு தோராயமாக 250 பூத்துகள் வரும். ஒவ்வொரு பூத் நிலவரமும் இதேபோல் சேகரிக்கப்பட்டு செந்தில் பாலாஜிக்கு ரிப்போர்ட் கொடுக்கப்படும்.
எந்தப் பகுதி பலவீனமாக இருக்கிறது என்பதை அறிந்து அங்கு என்னென்ன திட்டங்களை வகுக்கலாம் என அவர் உத்தரவு பிறப்பிப்பார். அது உடனடியாக பூத் கமிட்டி குழுவில் இடம்பெற்றவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதனால் எந்த பணியிலும் மந்தமாகாது. அவரின் இந்த ஒர்க்கிங் ஸ்டைலும், அவர் உருவாக்கும் நெட் ஒர்க் பணிகளும்தான் ஸ்டாலினை ஈர்த்துள்ளதாக ரொம்ப பெருமை பேசுகிறார்கள் திமுகவினர். இப்பவும் கூட அப்படித்தான் செந்தில்பாலாஜி கலக்குகிறார். ஒரே மாதத்தில் 100 மக்கள் சபைக்கூட்டங்களை நடத்தி விட்டார். லட்சோப லட்சம் மக்களிடம் மனுக்கள் பெற்றுள்ளார்!’ என்றெல்லாம் ரொம்பவும் பூரிக்கிறார்கள். ஆனால் இது திமுகவினருக்கு வேண்டுமானால் பெரிய விஷயமாக இருக்கலாம். எங்களைப் போன்ற கடைகோடியில் உள்ள அதிமுக நிர்வாகிகள்
10 ஆண்டுகளாக இந்தப் பணியைத்தான் செய்து வருகிறோம். அதிலும் கடந்த 5 ஆண்டுகளாக கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் எங்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முன் வைத்து நாங்கள் ஆற்றிய பணிகள் ஏராளம்.
அப் படித்தான் அதிமுகவின் எஃகுக்கோட்டையாக உருவானது கோவை. அதன் உச்சகட்டமாக போன ஆட்சியின்போது மட்டும் கோவையில் உருவான – நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஒன்று இரண்டல்ல ஓராயிரம் தாண்டும்!’’ என சிலவற்றை பட்டியலிட்டார் ஓர் அதிமுக நிர்வாகி.
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம். ரூ 350 கோடி மதிப்பில் கோவை மேற்குப் புறவழிச்சாலை திட்டம். ரூ.230 கோடியில் நொய்யல் சீரமைப்புத்திட்டம். ராணுவ தளவாடப் பாதுகாப்பு பூங்கா. ரூ.290 கோடி மதிப்பில் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை ரூ. 1621 கோடி மதிப்பில் தமிழகத்திலேயே மிக நீளமான உயர்நிலை மேம்பாலம். ரூ.215 கோடி மதிப்பில் கோவை ஆத்துப்பாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை உயர்நிலை மேம்பாலம், ரூ.195 கோடி மதிப்பில் காந்திபுரம் இரண்டு அடுக்கு மேம்பாலம். திருச்சிசாலை சுங்கம் மேம்பாலம். ரூ.1500 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள். புதிதாக 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள். ரூ. 19 கோடி மதிப்பில் நிர்வாக வசதிக்காக கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்கள். கோவையின் முக்கிய சாலைகள் அனைத்தும் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம். ரூ. 1652 கோடி மதிப்பில் அத்திக்கடவு -அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ. 779.86 கோடி மதிப்பில் பில்லூர் மூன்றாவது கூட்டுக்குடிநீர் திட்டம். ரூ.130.47 கோடி மதிப்பில் பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் குடிநீர்த்திட்டம். குறிச்சி-குனியமுத்தூர் ஆழியாறு குடிநீர் மேம்பாட்டு திட்டம்
‘‘இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொன்னால்
50 ஆண்டுகளாக நிறை வேற்றப்பட வேண்டிய திட்டங்களை ஐந்தே ஆண்டுகளில் கொண்டு வந்து அசுர சாதனை படைத்தார் எஸ்.பி.வேலுமணி
என்பதுதான் கட்சிக்காரர்கள் தாண்டி மக்களும் பேசும் பேச்சு. இப்போது திமுக ஆட்சி வந்த பின்பு உக்கடம் பாலம், சுங்கம் பாலம், கவுண்டம்பாளையம் போன்ற உயர்மட்டப் பால வேலைகளை சுணக்கப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள். வெள்ளலூர் பேருந்து நிலையத்தையே இடம் மாற்றிக் கொண்டு போக உள்ளூர் திமுகவினர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான சூழலில்தான் இப்போதைய விழாவில் 587. 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார் முதல்வர். இதில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் எல்லாம் அதிமுக ஆட்சியில் போடப்பட்டவை. புதிய திட்டப்பணிகள் கணக்கிட்டுப் பார்த்தால் எஸ்.பி.வேலுமணி செய்த சாதனையோடு ஒப்பிடும்போது யானைப்பசிக்கு சோளப்பொரி போலவும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமே உள்ளது.
எனவே இந்த செந்தில்பாலாஜி மட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலினே கோவைக்கு பொறுப்பாகப் போட்டாலும் அதிமுகவின் எஃகுக் கோட்டையை திமுக தகர்ப்பது கடினம்!’’ என்றே பேசினர் நம்மிடம் பேசிய அதிமுக நிர்வாகிகள்.
அவர் கள் மேலும் கூறும்போது, ‘‘சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்கள், வெவ்வேறு மாவட்டங்களில் இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான காலியிடங்களில் பெரும் பான்மையாக திமுக வெற்றி பெற்றதை வைத்து வரவிருக்கும் உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என நம்புகின்றனர் திமுகவினர். தவிர ஓட்டுக்கு பணம் என்பதை அவர்கள் தீவிரப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அதைப் பார்த்துக் கொண்டு அதிமுகவினரும் சும்மா இருப்போமா என்ன?
கோவையில் நான்கு கட்சி மாவட்டங்கள் இருக்கிறது. இப்போதைய நிலையில் அதன் மாவட்டச் செயலாளர்கள் யார் என்பது மக்களுக்கே தெரியவில்லை. ஒரு காலத்தில் தளபதி, தளபதி என்று ஓடியாடி ஸ்டாலினின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் தலைமையில் நூற்றுக்கணக்கான இலவச திருமணங்கள் நடத்தி வைத்த கோவை நகர முன்னாள் செயலாளர் வீரகோபால் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். 1996 முதல் கோவை திமுகவின் முடிசூடா மன்னராக விளங்கிய பொங்கலூர் பழனிசாமிக்கு பெயரளவிலேயே மரியாதை உள்ளது. செந்தில் பாலாஜியை வாய் நிறைய இவர் ‘மாப்பிள்ளே‘ என்றும், அவர், ‘‘மாமா!’ என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது உதட்டளவிலேயே உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி ஓடியாடி வேலை செய்கிறார்; செந்தில் பாலாஜி மட்டுமல்ல கோவைக்கு வரும் திமுக அமைச்சர்கள் யாரானாலும் இணக்கமாக அவர்களுடன் பழகி விழாக்களுக்கு செல்கிறார். இருந்தாலும் அரசியல் என்று பார்த்தால் கோஷ்டி கானம் நீரு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.
‘‘ஆயிரம்தான் இருந்தாலும் செந்தில்பாலாஜி வெளியூர்க்காரர்.
அவர் இங்கே வந்து அரசியல் செய்வதா என்ற ஆதங்க வெளிப்பாடு எல்லோரிடமும் இருக்கிறது. தவிர உள்ளாட்சி மன்றத் தேர்தல் காலத்தில் செந்தில் பாலாஜி ஆயிரம்தான் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருந்தாலும் அந்த நேரத்தில் தன் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றுவாரா? கோவையை காப்பாற்றுவாரா? அப்போதும் உள்ளூர் திமுக தலைவர்களை நம்பித்தானே தீர வேண்டும்.
ஆக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி பண பலம், அதிகார பலம், ஆளுங்கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டுப் பார்ப்போமே என்ற மக்களின் மனநிலை வேண்டுமானால் கணிசமான வெற்றியை திமுகவிற்கு கொடுக்கலாம். அதுவே இறுதியானதாக மாறாது.
உள்ளாட்சி நாயகன் எனப் புகழப்பட்ட எஸ்.பி.வேலுமணி ஃபுல் ஸ்விங்கில் இறங்கி களப்பணியாற்றினார் என்றால் கோவையை சுலபமாக வரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட அதிமுகவே அள்ளிக் கொள்ளும்!’’ என்கிறா ர்கள் விபரமறிந்த அரசியல் நோக்கர்கள்.

-சபா கமலக்கண்ணன்

scroll to top