நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர்ச்சூழல் நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். இரு நாள்களாக நடைபெற்ற தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பு இன்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ‘உக்ரைன் எல்லைப் பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் அதற்கு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இந்தியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம்’ – உக்ரைன் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்
