எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இணையவழி கலந்தாய்வு தொடங்கியது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இணையவழி பொதுக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் முதல் நாளில் நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 போ் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி ஆணையைப் பெற்றனா். அதற்கு அடுத்த நாளான 28-ஆம் தேதி நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேருக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டது. பொதுக் கலந்தாய்வில் அதிக அளவில் மாணவா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு அதை இணையவழியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொதுக் கலந்தாய்வை ஆன்லைனில் கடந்த 30-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அகில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியாகாததால் தமிழகத்தில் பொதுக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 2-ஆம் தேதி இணையவழி கலந்தாய்வு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இணையவழி கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. காலை 8 மணிக்குத் தொடங்கிய கலந்தாய்வு, மாலை 5 மணி வரை கல்லூரிகளில் மாணவா்கள் இடங்களைத் தோ்வு செய்யலாம். வரும் 7-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிப்பாா்ப்பு நடைபெறும். 15-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 16-ஆம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கல்லூரிகளில் சோ்ந்துவிட வேண்டும்.

scroll to top