எதுவுமே தெரியாத முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

v1.jpeg

கோவை மாவட்டத்தை ஆளும் தமிழக அரசு முழுமையாக புறக்கணிப்பதாகவும் கோவை மாவட்டம் யாரும் கேட்க நாதி இல்லாமல் இருக்கிறது எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சாடியுள்ளார்

தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு,போதை பொருட்கள் நடமாட்டம்,சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி வருகிற 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், கிணத்துகடவு தாமோதரன்,கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகம் முழுவதும் 75 கட்சி மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் கோவை மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சி,கோவை செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதுடன் திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி பங்கேற்க வைக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

திமுக வினர் மக்கள் பணம் 3000 ஆயிரம் கோடியை மோசடி செய்துள்ளதாகவும் இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை பதவி விலக வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் கூறியதுடன் இந்தியாவில் பல முதல்வர்கள் இருப்பினும் முதல்வர்களிலேயே எதுவுமே தெரியாமல் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் எனவும் விமர்சித்தார். விளம்பரத்தில் மட்டும் இந்த ஆட்சி சிறப்பாக உள்ளது எனவும் கடந்த ஆண்டு துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தார் எனவும் இப்போதும் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளார் எத்தனை முதலீடு வருகிறது என பார்ப்போம் எனவும் கேள்வி எழுப்பினார்.

மக்களுக்காக செயல்பட்டதும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்ததும் எடப்பாடியார் மட்டுமே என கூறிய எஸ்.பி.வேலுமணி,அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகள் 95 சதவீதத்தை அதிமுக ஆட்சியின் போதே முடித்து வைத்தும் இன்னும் அத்திட்டம் துவக்கப்படவில்லை எனவும் இப்போது ஸ்டாலின் துவக்கி வைக்கும் திட்டங்கள் அனைத்தும் எடப்பாடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.மேலும் தமிழகத்தில் தற்போது வருவாய் துறை மாநகராட்சி,பேரூராட்சி என எங்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றும் தினசரி 5 ஆயிரம் லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் சொந்த இடத்தில் விவசாயிகள் மண்ணெடுக்க முடியவில்லை எனவும் ஸ்டாலின் குடும்பம் ஆட்களை நியமித்து வசூல் செய்து வருகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

கோவையில் வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் எங்கு போனார்கள் என தெரியவில்லை என்றும் அனைத்து பகுதிகளிலும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் தான் தற்போது பணியாற்றி வருகின்றனர் என்றும் கூறினார்.தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் சரளமாக உள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருசக்கர வாகனத்தில் சென்று சங்கிலி பறிப்பு நடத்தியது போய் தற்போது காரில் சென்று சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறியதுடன் கோவை மாவட்டத்தை ஆளும் அரசு முழுமையாக புறக்கணிக்கின்றனர் என்றும் கோவை மாவட்டம் யாரும் கேட்க நாதி இல்லாமல் இருக்கிறது என்றும் வேதனை தெரிவித்தார்.

மக்களுக்காக எதுவும் செய்யாத நிலையில் குறைகளை பதிவிட்டால் பதிவிடுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.ஆளும் கட்சியினர் தற்போது தொட்டதுக்கெல்லாம் நீதிமன்றம் செல்கின்ற நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் சும்மா விட்டு விடுவோமா என கேட்ட அவர்,ஆட்சி நன்றாக நடக்கிறதா? மு க ஸ்டாலின் நல்ல முதல்வரா? மக்களுக்கான திட்டங்களை செய்கிறார்களா? என அடுக்கடுக்கான கேள்வியெழுப்பியதுடன் அதிமுக ஆட்சியின்போது மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று எத்தனை பாட்டு பாடினீர்கள்? அவர்கள் எல்லாம் எங்கோ போய் விட்டார்கள் எனவும் கூறினார்.அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்ட சூழலில் இன்று திமுக ஆட்சியில் காவல்துறை அவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறது என்றும் கோவையில் காவல்துறை மிக மோசமாக செயல்படுகிறது எனவும் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

scroll to top