அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதமும் அளிக்கப்பட்டது. ஆனால் சட்டசபை விதிகளை கூறி சபாநாயகர் அங்கீகரிக்க மறுத்தார். இதனால், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை.இந்நிலையில், வள்ளுவர்கோட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க கைது
