எடப்பாடி பழனிசாமி VS ஓ. பன்னீர்செல்வம்…உள்நுழையும் பாஜக; வேடிக்கை பார்க்கும் திமுக

eps-ops.jpg

file photo

‘இபிஎஸ்ஸிற்கு மறைமுக ஆதரவுக் கரம் நீட்டுகிறதா திமுக? பொதுக்குழு தர்ம யுத்ததின் பின்னணி அரசியல்’ என்ற செய்திக் கட்டுரையை இரண்டு வாரங்கள் முன்பு வெளியிட்டிருந்தோம். இந்தக் காலகட்டத்தில் அதிமுக பொதுக்குழு கட்சி, கோஷ்டி யுத்தம் மற்றும் கோர்ட் கச்சேரி என்று இழுபறியாய் இருந்து வருகிறது. 11-ந்தேதி பொதுக்குழு கூட உள்ள நிலையில் அன்றைய தினம் 9 மணிக்கு பொதுக்குழு கூட்டம் குறித்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மீடியாக்களில் நாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுதிய மேற்படி தலைப்புச் செய்தி கட்டுரையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. திமுக எதிர்காலத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதிமுக முழுமையாக இருக்க வேண்டும். அது இரண்டாக உடைந்தாலோ, அல்லது சொற்ப நிர்வாகிகளோடு ஓபிஎஸ் தன்னைப் பிரித்துக் கொண்டு சென்றால் பாஜகவிற்கு அது வசதியாகி விடும்.

தேர்தல் ஆணையம், கோர்ட் எல்லா விவகாரங்களிலும் தலையை நுழைத்து அதிமுகவின் இரட்டை இலையை முடக்கி விடும். அதன் மூலம் பாஜக தன்னை தமிழகத்தில் வளர்த்துக் கொள்ளும். இப்படி பட்டிமன்றம், வழக்காடு மன்றம் நடத்தாத குறையாக விவாதித்துக் கொண்டிருக்கிறது பத்திரிகை மீடியாக்கள். இது எந்த அளவு சாத்தியம்? அதைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

ஏற்கனவே கட்டுரையில் சொன்ன மாதிரி 75 மாவட்ட செயலாளர்கள், 3000 பொதுக்குழு உறுப்பினர்கள், 50-க்கும் அதிகமான துணை அமைப்புகள், பல்லாயிரக்கணக்கான மாவட்ட, மாநில நிர்வாகிகள் கொண்ட தமிழகத்தின் மாபெரும் கட்சி அமைப்பாக செயல்படுகிறது அதிமுக. எம்.ஜி.ஆர் என்ற சினிமா நட்சத்திரம் உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா என்கிற சினிமா நட்சத்திரம் வழி நடத்திய கட்சி இப்போது அவர்கள் வகித்த பதவியான பொதுச்செயலாளர் என்ற பதவியை யார் அடைவது என்ற கடும் போட்டியில் நிற்கிறது. அதன் பெயர்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோஷம்.

இந்தக் கட்சிக்கு இதுபோன்ற சோதனை இன்று நேற்றல்ல. தலைவர்கள் மறையும் போதெல்லாம் வந்திருக்கிறது. அதில் எல்லாம் மீண்டு உயிர்த்தெழுந்திருக்கிறது என்பது வரலாறு. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவா? ஜானகியா? என்ற நிலையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஜானகி பின்னால் நின்றார்கள். அதற்கு வழி அமைத்துக் கொடுத்தவர் ஆர்.எம். வீரப்பன்.

ஆனால் மக்கள் சக்தி என்பது ஜெயலலிதா பின்னாலேயே இருந்தது. அதை அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் விரும்பவில்லை. ஜானகி பெரும்பான்மை நிரூபிக்க முடியாத அளவு கூச்சல் குழப்பம் ஏற்பட்டு சட்டசபைக் கலைக்கப்பட்டது. கட்சியும் இரண்டாகப் பிளந்தது. இரட்டை இலை முடக்கப்பட்டது. அதிமுகவின் ஜெ, ஜா அணி தேர்தலை சந்தித்தது.

அப்போது கட்சியின் ஓட்டுக்கள் இருகூராக பிரிய திமுக வெற்றி பெற அது வாய்ப்பு அமைத்துக் கொடுத்தது. என்றாலும் கூட அதிமுக ஜா அணி இரண்டு சீட்டுகளிலும், ஜெ அணி 27 சீட்டுகளையும் கைப்பற்ற அதிமுகவின் ஆகப் பெரும் அணியாக ஜெ அணியே நின்றது.

வலுவான எதிர்கட்சியாகவும் செயல்பட்டது. பின்னாளில் ஜா, ஜெ அணி இணைக்கப்பட்டது. தேசியக்கட்சியான காங்கிரஸ் இந்தப் பிளவில் குளிர்காய நினைத்தது எடுபடவில்லை.

அதே வரலாறு ஜெயலலிதா இறந்த பின்பு ஐந்தாண்டுகளுக்கு முன்பு திரும்பியது. ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டி வந்தது. சசிகலா கட்சி பொதுச்செயலாளர் ஆகி, முதல்வர் ஆகக்கூடிய நேரம். அவர் மீதான வழக்குகளில் தண்டனை வரவே கதை திசை திரும்பியது.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ் வேறு பல செயல்களை எல்லாம் செய்து பார்த்தார். சொற்ப எம்.எல்.ஏக்களை மட்டுமே அவரால் கொண்டு போக முடிந்தது. அதிலும் பலமாக நின்றார் எடப்பாடி பழனிசாமி.

ஆட்சி கவிழ்ந்தால் ரொம்ப சுலபமாக திமுக பீடத்தில் அமர்ந்து விடும் என்பதை அதிமுகவின் ஒவ்வொரு எம்எல்ஏக்களும் உணர்ந்தே இருந்தனர். அதனால் ஒருவரையொருவர் இறுகப்பற்றிக் கொண்டே நகர்ந்தனர். இதில் மத்திய பாஜக அரசின் கைங்கர்யமும் இருந்தது.

அப்போது இருந்து இப்போது வரை அதிமுகவின் பிளவுக்கும், ஓபிஎஸ் ஆதரவு நிலைக்கும் பாஜக பங்கம் வராமலே நடந்து வருகிறது. அது சில நேரங்களில் வெளிப்படையாகவும், பல நேரங்களில் மறைமுகமாகவுமே இருந்து வருவதை அனைவரும் உணர்ந்தே உள்ளார்கள்.

ஆட்சியில் இருந்த நான்கரை ஆண்டுகாலமும் சரி, எதிர்கட்சியாக உள்ள கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாகவும் சரி அதை எடப்பாடி பழனிசாமியும், அவர் ஆதரவு நிர்வாகி எம்.எல்.ஏக்களும் உணர்ந்தே உள்ளனர். தவிர எடப்பாடி பழனிசாமி தன் கட்சிக்காரர்களையும், நிர்வாகிகளையும், எம்.எல்.ஏக்களையும் ஆதரிப்பதிலும், அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்பதிலும் வல்லவராக நல்லவராகவே உள்ளார்.

எனவேதான் ஓபிஎஸ் கட்சிக்குள் கோளாறு செய்யும்போதெல்லாம் அத்தனை அதிமுக பெரும்தலைகளும் எடப்பாடி பின்னால் அணி திரள்கிறார்கள். அந்த அணி திரட்சிதான் தற்போது பொதுக்குழு கூட்டத்திலும் நடக்கிறது. இந்த ஏகோபித்த ஆதரவை வைத்து அவர் பொதுச் செயலாளர் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக காய் நகர்த்துகிறார் ஓபிஎஸ்ஸூம்,

அவருடன் இருக்கும் ஒன்றிரண்டு பேரும். இவ்வளவு ஏகோபித்த ஆதரவு ஓர் அணிக்கு இருந்ததும், அவர்கள் கூட்டம் நடத்தி தீர்மானம் இயற்ற முயற்சிக்கும் போது அவர்களுக்கு இடைஞ்சல் செய்யும் சிறு அணி இவ்வளவு பெரிய துன்பத்தைக் கொடுப்பதும் அதிமுக வரலாற்றில் இதுவே முதன் முறை.

‘கொசுவை அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டுப் போறதை விட்டுட்டு’ என்று சொல்வார்களே அப்படியான சின்ன விஷயம்தான் இது. இதை ஊதிப் பெரிதாக்குபவர்கள் யார்? நிச்சயம் ஆட்சியில் உள்ளவர்களாகத்தான் இருக்கும்.

இதனால் பயன்பெறுபவர்களாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியானால் அந்த பயன்பெறும் எதிரி யார் என்ற ஒற்றைப் புள்ளியில் வந்து நிற்கிறது இந்த சந்தேகம். ஒன்று அதிமுகவின் பிரதான எதிரியான திமுக. அடுத்தது மத்தியில் உள்ள ஆளுங்கட்சி பாஜக. அதற்கு அடுத்த நிலையில் வேறு யாருமே இல்லை.

திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் அதனிடம் சட்டம் ஒழுங்கு கட்டிக் காக்கும் விஷயம் மட்டுமே இருக்கிறது. அதிமுகவிற்கு எதிராக மறைமுக சட்ட நடவடிக்கைகளை முடுக்கி விடும் ஆற்றல், அதுவும் நீதிமன்றங்கள் வாயிலாக அதற்கு சாத்தியமேயில்லை.

அது முழுக்க மத்திய ஆட்சியாளரான பாஜகவிடமே உள்ளது. பாஜக ஒட்டுமொத்தமாக அதிமுகவிற்கு சப்போர்ட்டா என்றால் இல்லை. ஆனால் ஓபிஎஸ் அணிக்கு பூரண சப்போர்ட் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பாஜக மட்டும் இப்படி கண்மூடித்தனமாக ஓபிஎஸ்ஸிற்கு ஆதரவு அளிக்காவிட்டால், இப்போது அதிமுகவின் பெரும்பான்மை மூத்த தலைவர்கள் அவர் அரசியலில் இருக்கும் இடமே இல்லாமல் செய்திருக்கும்.

இன்றைக்கும் ஓபிஎஸ்ஸையும், அவர் குடும்ப அரசியலை லைம் லைட்டில் வைத்திருக்கிறது பாஜக. அதைத்தான் அரசியல் நோக்கர்கள் தற்போது விவாதப் பொருள் ஆக்கி வருகிறார்கள். தமிழகத்தின் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு மட்டுமல்ல, மற்ற எதிர்கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் எல்லோருமே அதிமுக விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது அபாயகரமானது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

அதை வலுவான அணியான எடப்பாடி தரப்புக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டுமிருக்கிறார்கள். தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் வலுவாக இருக்கும் வரை எந்த தேசியக்கட்சியாலும் உள்ளே நுழைந்து விட முடியாது. இது அதிமுக, திமுகவிற்கும் தெரியும்.

கண்டிப்பாக பொதுக்குழு கூடினால், அதில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. அப்படி உருவானால் அதிமுக முழுமையாக ஒரு தலைமையின் கீழ் சென்று விடும். ஓபிஎஸ் செல்லாக்காசு ஆகி விடுவார். அப்படி ஆக விடக்கூடாது. அதற்காக ஏற்கனவே இருந்த இரட்டைத் தலைமை என்ற நூலைக்கட்டி மலையை இழுத்துப் பார்க்கிறார்கள். வந்தால் மலை. போனால் நூல்தானே என்ற எண்ணம்.

ஆனால் அந்த நூலில் சட்ட ஓட்டைகள், அரசியல் சாதுர்யங்கள் நிறைந்தே இருக்கின்றன. இது எல்லாம் பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ் மூலம்தான் செய்ய முடியும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. அதிமுக இரண்டாக உடைந்தால் உடனே இரட்டை இலையை முடக்க முடியும். ஆளாளுக்கு சில வருடங்கள் அல்லது மாதங்களேனும் அடித்துக் கொள்வார்கள்.

அதன் மூலம் கட்சி சிதறும் நிர்வாகிகளை வைத்து ஓபிஎஸ் தலைமையில் தன் இணக்கமான அணியை கொண்டு வரவே முயற்சிக்கிறது பாஜக. அதை வைத்து தமிழகத்திலும் தன் ஆட்சியை நிறுவ முயற்சிக்கிறது.

‘‘இப்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் அதன் நிமித்தம் தன் அசலான முகத்தைக் காட்டாமல் உள்ளது. அதிமுக ஒட்டுமொத்த உறுப்பினர்களின் தயை வேண்டியதிருக்கிறது. அதனால்தான் இன்றைக்கும் அடக்கி வாசிக்கிறார்கள்!’’ என்கிறார் மூத்த அதிமுக நிர்வாகி ஒருவர்.

‘‘திமுகவைப் பொறுத்தவரை அதிமுக உடையாமல் பாதுகாத்தாக வேண்டும். அப்படியே உடைந்தாலும் பாஜக உள்நுழையாத பலவானாக எடப்பாடி அணியை பிரதான எதிர்க்கட்சியாக வைத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் அதற்கு உள்ளது!’’ என்ற கருத்தைத் தெரிவிக்கிறார்கள் அதிமுகவின் நடுநிலையாளர்கள்.

ஆக, எப்படி கணக்கிட்டுப் பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியே இருக்கிறது. அவருக்கான நேர்முக சப்போர்ட் மட்டுமல்ல, மறைமுக  சப்போர்ட்டும் கூட அவரை பொதுச்செயலாளர் ஆக்கியே தீரும்.

scroll to top