எடப்பாடி பழனிசாமியா; ஓ. பன்னீர் செல்வமா? எப்போது ஓயும் அதிமுகவின் ஆடுபுலி ஆட்டம்

Pi7_Image_eps-ops-1.jpg

THE KOVAI HERALD

அதிமுகவில் மீண்டும் வெற்றிக்கனியை தட்டியுள்ளது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி. ‘அதிமுக பொதுக்குழு செல்லும் எடப்பாடிதான் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்’ என்று பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்னவே தனி நீதிபதி வழங்கிய, ‘பொதுக்குழு செல்லாது’ என்ற தீர்ப்பை ரத்து செய்துள்ளனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர். இதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் அணி உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது

முன்பு ஓபிஎஸ் அணி தன் வெற்றிக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடிய நிலையில் தற்போது இபிஎஸ் அணி தனது வெற்றிக்கு ஸ்வீட் வழங்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. முந்தைய கொண்டாட்டம் சிறிய அளவிலேயே இருந்தது. இப்போதையே கொண்டாட்டம் மெகா சைசில் இருந்ததிலிருந்து எடப்பாடி அணிக்கும், ஓபிஎஸ் அணிக்குமான உயரம் மலைக்கும் மடுவுக்குமான உயரம் என்பதை திரும்ப நிரூபித்திருக்கிறது.

என்றாலும் இந்தப் பொதுக்குழு, அடுத்தடுத்த தீர்ப்புகள், திரும்ப மேல்முறையீடு அதிமுகவை எங்கே கொண்டு போய் நிலை நிறுத்தும். யாருக்கு சாதகமாக இறுதி அத்தியாயம் எழுதப்படும். இந்த அதிமுக ஆடுபுலி ஆட்டம் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்பதுதான் தமிழக அரசியல் நோக்கர்களின் பார்வையாகவும், கேள்வியாகவும் உள்ளது.

‘அதிமுகவிற்கு இப்போது வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்!’ என்கிறார்கள் நாம் விசாரித்த அளவில் அக்கட்சியினர்.   

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று.. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரிக்கப்பட்டது.

இதில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும். அந்த பொதுக்குழுவில் எந்த பதவியும் உருவாக்கப்படவில்லை, நீக்கப்படவில்லை. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. என்ன மாற்றம் அதன்படி அதிமுகவில் மீண்டும் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் ஆனார். எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தானாக நீக்கப்பட்டது. மீண்டும் அவர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆனார். அதோடு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேல்முறையீடு எடப்பாடி தரப்பு இந்த வழக்கில் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்தது. முதல் கோரிக்கை இந்த வழக்கில் மறுவிசாரணை. பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததற்கு எதிராக மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்தனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. இதில் இரண்டு தரப்பிற்கும் தலா ஒரு மணி நேரம் வாதம் நடத்த நேரம் கொடுக்கப்பட்டது, வாதம்

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சுமார் 3 மணி நேரம் வாதம் செய்தது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் வழக்கில் வாதம் வைத்தது. பொதுக்குழு சட்டப்படியே நடத்தாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தில் குறிப்பிட்டது. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி கூட்டியதே செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கூறியது. பொதுக்குழுவிற்கே அதிக அதிகாரம் உள்ளது என்று எடப்பாடி தரப்பும், தொண்டர்களுக்கே அதிக அதிகாரம் உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பும் வாதம் வைத்தது.

இதையடுத்து வாதங்கள் முடிந்த நிலையில் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த வெள்ளியன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது . ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம். அதில் ஒரு மூத்த நிர்வாகி பேசும்போது ‘‘ஒற்றைத் தலைமை. அதற்கு எடப்பாடி பழனிசாமிதான் பொருத்தமானவர். அதை அனைத்துத் தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டு வெகுநாளாகி விட்டது. ஆனால் ஓபிஎஸ் தன் பக்கம் மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தில் திமுகவையும் மறைமுகமான ஆதரவாக வைத்துக் கொண்டுதான் இந்த சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். உண்மையில் அவருக்கே அது தெரியும். வந்தா மலை, போனா வேறு ஒண்ணு என்கிற ரீதியில்தான் இதில் அவர் காய் நகர்த்துகிறார். அதற்கு மாறி மாறி ஆளுங்கட்சிகளின் மறைமுக சப்போர்ட் உள்ளது.

இப்படியான நிலையில்தான் அவருக்கு போன முறை அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இப்போது அந்த தீர்ப்பு செல்லாது என்றாகி விட்டது. இப்போது மாநில ஆளுங்கட்சியான திமுகவின் மறைமுக ஆதரவு அவருக்கு கானல் நீராகி விட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பான கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததிலிருந்தே இது உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்பட்டு விட்டது. ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. அதற்காக சசிகலா மற்றும் அப்போது பதவியில் இருந்தவர்கள் விசாரிக்கப்படுவர் என்பது ஊர்ஜிதமாகிறது.

அதன்படி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்தான் பெரிய பதவிகளில் அந்தக் காலகட்டத்தில் இருந்தவர்கள் என்பதால் அவர்கள் எல்லாம் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள். எனவே ஆளுங்கட்சி ஓபிஎஸ் ஆதரவான நிலை இல்லை; அல்லது ஆதரவு நிலையிலிருந்து கைவிட்டு விட்டது என்று சொல்லலாம். ஆகவே அவர் கை இப்போது பலம் குறைந்து காணப்படுகிறது. அவரிடம் ஓரிரு எம்.எல்.ஏக்களைத் தவிர வேறு எவருமே இல்லை. அதேபோல் பொதுக்குழு உறுப்பினர்களும் 90 சதவீதம் இந்தப் பக்கமே உள்ளனர்.

இப்போது கிடைத்த தீர்ப்பால் இன்னமும் 9 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்தப் பக்கம் வர காத்திருக்கின்றனர். இனி ஓபிஎஸ்ஸூம், அவர் மகன் மற்றும் ஓரிருவர் மட்டுமே அங்கே இருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர் அப்பீலுக்குப் போனாலும் கூட அவருக்கு சாதகமாக தீர்ப்பு வருவது கஷ்டம். எனவே இந்த விளையாட்டை அவர் தனக்குத் தோல்வி என்று தெரிந்தேதான் ஆடுகிறார். உட்கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அது இனியும் சாத்தியமில்லை என்பதை தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். விரைவில் தன் ஆயுதத்தை கீழே போட்டு விடுவார் ஓபிஎஸ். ஏகோபித்த அளவில் எடப்பாடி பழனிசாமி நிரந்தரப் பொதுச் செயலாளராகவே தேர்ந்தெடுக்கப்படுவார். அது வெகு தூரத்தில் இல்லை!’’ என்றார்.

S.KAMALA KANNAN Ph. 9244319559    

scroll to top