‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியின் மேல் தமிழக மக்கள் வைத்துள்ள ஆதரவிற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதன் எதிரொலியே இந்த வெற்றி. ஈரோட்டில் சில பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனது மகன் விட்டுச்சென்ற பணிகள் மற்றும் இதர பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து முதல்வரை சந்தித்து ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். ஸ்டாலின் முதல்வராக இருக்கின்ற சட்டப்பேரவையில் நானும் அங்கமாக போகிறேன் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. அவர் மூலம் இந்த ஊர் மக்களுக்கு நல்லதை செய்வேன். மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு!’’
ஈரோட்டில் வெற்றி வாகை சூடிய பின்பு ஈவிகேஎஸ். இளங்கோவன் அளித்த முதல் பேட்டி இது. அவர் சொல்வது போல் உண்மையிலேயே இந்த வெற்றி அவருக்கானதா? அவரை வெற்றி பெற வைத்த திமுகவிற்கானதா? மகன் விட்டுச் சென்ற பணியை நான் தொடர்வேன் என்றிருக்கிறாரே. அதில் எந்த அளவு உண்மையிருக்கிறது? அதை விட முக்கியம் விரைவில் வரக்கூடிய மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம் இது என்றிருக்கிறார். அது சாத்தியமா? யோசிக்க வேண்டியிருக்கிறது.
இதே நேரத்தில் ‘இந்த ‘இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்விகரமான வெற்றி!’ என்றிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
“எங்களின் கட்சி வேகமாக உள்ளது. எழுச்சியாக உள்ளது. வரும் காலங்களில் வீறுகொண்டு மகத்தான வெற்றியை பெறும் நிலையில் தான் கட்சி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலைப் பார்த்து ஆளும் திமுக அரசு மிகப்பெரிய பயத்தில் இருந்தது. இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் இது போன்று அவர்கள் பயந்தது கிடையாது. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. 22 மாதங்களில் திமுக சம்பாதித்த பணத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் செலவு செய்தனர். ஆளும் அரசின் பணம் பாதளம் வரை பாய்ந்துள்ளது. அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களை அடைத்து வைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர். எங்களை பார்க்காமல் இருப்பதற்காகவே பணம் கொடுத்துள்ளனர். இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். எங்களை பொறுத்த வரையில் இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள்தான் உண்மையாக வெற்றி பெற்றுள்ளோம். இது திமுகவிற்கு வெற்றி கிடையாது!’’
ஏறத்தாழ ஜெயக்குமார் சொல்வதில் பாதி உண்மை இருக்கவே செய்கிறது. பணத்தைக் கொண்டு அவர்கள் ஜெயித்துள்ளனர் என்று சொல்லும் அவர்களைப் போலவே இந்தத் தரப்பிலும் பணம் பாய்ந்துள்ளது. அதாவது அதிமுகவைத் தவிர வேறு கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற உறுதியுடன் இருக்கும் மக்களை வாக்குச்சாவடிக்கு வரழைத்து இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வைக்கவே அதிமுகவும் தண்ணீராக பணத்தை வாரியிறைக்க வேண்டியிருந்துள்ளது. ஒருவேளை அப்படி மட்டும் செய்யாவிட்டால் இப்போது வாங்கின ஓட்டுக்களிலும் பாதியாகக்குறைந்திருக்கும் என்பதே நிஜம்
அது மட்டுமல்ல போன முறை வாங்கின அதிமுக வாக்குகள் இப்போது மிகவும் குறைந்துள்ளது. அப்படி விடுபட்ட ஓட்டுகள் எவை என்ற கேள்வியும் எழுகிறது. அது ஆளுங்கட்சிக்குப் போக என்ன காரணம்? இங்கேதான் ஜாதி வேலை செய்கிறது. கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏவாக வருவதை முதல்வராக வரவேண்டும் என்ற வேட்கை அந்த சமூகத்தவர்க்கு இருந்தது. அதற்காகவே மாற்றுக்கட்சி என்றும் பாராது அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் நிறைய இருந்தனர். அதில் திமுக வாக்கு வங்கியும், காங்கிரஸ் வாக்கு வங்கியும், ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான வெறுப்பு (இவர் மகன் போட்டியிட்டபோது) வங்கியும் இருந்தது.
அதையும் தாண்டித்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் வெற்றி பெற்றார். இப்போது அப்படியல்ல நம் தொகுதிக்கு ஆளுங்கட்சி கூட்டணி வேட்பாளர் வென்றால்தான் நல்லது. இல்லாவிட்டால் நம் தெருவில் சாக்கடை அள்ளக்கூட ஆள் வருவது கஷ்டம்!’ என்ற சுலபமான கணக்குப் போடும் மனநிலையில் மக்கள் இருந்தனர். அதுவே இத்தனை பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைத்துள்ளது.
பணம் செலவு செய்தாலும், செய்யாவிட்டாலும் திமுக கூட்டணி வெற்றி உறுதி என்பது ஆளும்தரப்புக்குத் தெரியும். ஆனாலும் கூட ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் இத்தனை அரசு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்?
இப்போதெல்லாம் இது ஒரு ஃபார்முலா ஆகி விட்டது. தவிர ஆளும் வாய்ப்பைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலைக்கு மற்றவற்றைத் தள்ள வேண்டும் என்ற நோக்கம்தான் இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும். இதை ஆளும்கட்சிகள் இன்று நேற்றல்ல கடந்த 40 ஆண்டுகளாகவே மாறி மாறி செய்து வருகின்றன என்பது வரலாற்று உண்மை.
அதிமுகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மூலம் தோல்வியைத்தான் சந்திக்கும் என்பது அக்கட்சியினருக்கே தெரியும் என்றாலும், கெளரவமான வாக்குகளைப் பெற வேண்டும் என்ற துடிப்பே மிகுதியாக இருந்தது. அதை விட முக்கியம் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக. அதிமுகதான் எடப்பாடி என்ற உறுதிப்பாட்டிற்கு ஓ. பன்னீர் செல்வம் மூலம் தொடர்ந்து பங்கம் வந்து கொண்டே இருந்தது.
அதை முறியடிக்கும் தேர்தலாக, அதற்கு ஒரு வாய்ப்பாக இவர்களுக்கு அமைந்து விட்டது. நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்ததும், பன்னீர் செல்வம் வேட்பாளர் வாபஸ் வாங்கிச் சென்றதும், தினகரன் கழன்று கொண்டதும், இரட்டை இலைக்கு பங்கம் இல்லாமல் அதிமுக வேட்பாளர் போட்டியிட்டதுமான அடுத்தடுத்த பரபரப்பான செயல்கள் எல்லாம் அதிமுகவிற்கு, குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வெற்றியாகும்.
இந்த வெற்றியை ஒப்பிட்டால் திமுக பெற்றிருப்பது வெற்றியே அல்ல. ஏனென்றால் அது காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்திருக்கிறது. அதிலும் சளசளவென்று ஏதாவது ஒரு சர்ச்சையை இழுத்துப் போட்டு திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னாள் மத்திய அமைச்சரை, முன்னாள் காங்கிரஸ் தலைவரை எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்க உதவியிருக்கிறது. இதனால் மாபெரும் மாற்றம் ஏதும் தமிழக அரசியலிலோ, திமுகவிலோ, காங்கிரஸிலோ கூட நடந்து விடப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
இதில் நாம் தமிழர் கட்சியின் தோல்வி பாவம் என்றால், தேமுதிகவின் தோல்வி பரிதாபம் எனலாம். அதையும் தாண்டி பணத்துக்காக அல்லாமல் கட்சிக்காக, வேட்பாளருக்காக பார்த்து ஓட்டுப்போடும் மக்களும் இன்னமும் உள்ளார்கள் என்கிற நம்பிக்கையை அவர்கள் பெற்ற ஓட்டுகள் இங்கே விதைக்கவே செய்கிறது. அது இந்த ஜனநாயகத்திற்கும், நேர்மையே நேர்மையே என வாழும் மக்களுக்காகவும் கிடைத்த வெற்றி எனக் கொள்ளலாம்.