இருசக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி-காவலர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள என்.முக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணசாஸ்தா (26). ஆட்டோ ஓட்டுனரான இவர், தனது ஆட்டோவிற்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்குவதற்காக, இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். ஆத்திப்பட்டி அருகே சரவணசாஸ்தா சென்று கொண்டிருந்த போது, அவரது வாகனத்தின் மீது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் கடுமையாக மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்தப்பகுதியில் சென்றவர்கள் விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனலிக்காமல் சரவணசாஸ்தா பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர் சித்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை (38) என்பதும், அவர் பரளச்சி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. படுகாயமடைந்த காவலர் பாண்டித்துரை, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top