இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்ற பிட்டுக்கு மண் சுமந்த லீலை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:

Pi7_Image_WhatsAppImage2022-09-07at06.27.37.jpeg

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், ஒன்பதாம் நாளான இன்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனிடமிருந்து சிவபெருமான், செங்கோல் பெற்று ஆட்சி பொறுப்பேற்ற நிகழ்வு 7 ஆம் நாள் திருவிழாவின் போது மதுரை மீனாட்சி கோவிலில் நடைபெற்றது. இந்நிலையில், ஆவணி மூலத் திருவிழாவின் 9 ஆம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்வு நடைபெற்றது.
மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பில்,
மேல் தனுர் லக்கனத்தில், மண்சாத்துதல் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, சுவாமி வேடமணிந்த  சிவாச்சாரியாரும், மன்னர் வேடமணிந்த சிவாச்சாரியாரும் சுவாமியின் பிட்டுக்காக பிரம்படி பட்டு மண் சுமந்த லீலையை நிகழ்த்தி காட்டினர்.
வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வர வேண்டும் என்று அரசர் ஆணையிட்டார். வந்தி என்னும் பிட்டு விற்கும் கிழவிக்கு ஒருவருமில்லை. இறைவனே கூலியாளாக வடிவெடுத்து வந்து, வந்தி தந்த பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறினார்.
ஆனால் தன் பங்கு கரையை அடைக்காமல் பிட்டு உணவை அருந்தி, ஆடிப்பாடி கடம்ப மரத்தின் அடியில் ஆழ்ந்த துயில் கொண்டார். பார்வையிட வந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் தன் கையிலிருந்த பிரம்பால் அவர் முதுகில் அடிக்க அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் அந்த அடி பட்டது. அரசன் உண்மையை உணர்ந்தான், இறைவன் அசரீரியாக மாணிக்கவாசகர் பெருமையையும் வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும், தாம் இவ்வாறு செய்ததாக மன்னனுக்கு உரைத்தார். மன்னனும் மாணிக்கவாசகரை இறைபணிக்கு விடுவித்து நானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தான் என்கிறது திருவிளையாடல் புராணம்.
அதன் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சிவனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

scroll to top