இயற்கை விவசாயம் இதுவே வரப்பிரசாதம்

இன்றைய காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் கலப்படங்கள் .மனிதனுக்கான உணவுப் பொருட்களிலும் கலப்படங்கள் கணக்கின்றி காணப்படுகிறது. செயற்கை முறையில் தயாராகும் உணவு பொருட்களை நாடிச் சென்றால் ,பல உடல் உபாதைகளால் தீங்கு ஏற்படுவது திண்ணம். அதனால், இயற்கையாக விளை விற்கும் பொருட்களுக்கு தற்பொழுது பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இயற்கை உணவுப் பொருட்களை, இயற்கை உணவுகளை மக்கள் நாடி செல்வது தற்பொழுது அதிகரித்து வருகிறது.
தங்களின் சுகாதாரத்தின் மேல் மக்களுக்கு இப்பொழுது மிகப்பெரியதொரு ஆர்வம் ஏற்பட்டு உள்ளதே இதைக் காட்டுகிறது.

மீன் பண்ணை கழிவுகளின் மூலம் இயற்கை விவசாயத்தினை அதிகரித்து உற்பத்தியை பெருக்கி காட்டி வருகிறார் கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ள புதுப்பாளையத்தினை சேர்ந்த வேலுமணி. விவசாய குடும்பத்தைச் சார்ந்த பட்டதாரியான வேலுமணி கூறும்போது, விவசாயத்தினை பரம்பரையாக செய்து வரும் எங்கள் குடும்பத்தில், சிறுவயது முதலே விவசாயம் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள முடிந்தது.

பெற்றோர்கள் செய்து வந்த முறைகளை மாற்றி,நாமும் ஏதாவது விவசாயத்தில் செய்ய வேண்டுமென தோன்றியது. அதற்கு என் கணவர் பாலச்சந்திரன் ஊக்கமாக இருந்தார்.
அவர் கோவையின் மேற்கு பகுதியான இருட்டுப்பள்ளம் வளையன் குட்டை பகுதிகளில் விவசாய நிலங்களில் மீன் பண்ணை அமைத்து தொழில் நடத்தி வந்தார். அந்த மீன் பண்ணை கழிவு நீரை வீணாக்காமல் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என தோன்றியது. அதனால் அந்த நீரை, தென்னை மரங்களுக்கு பயன்படுத்தினோம் .விளைவு, தென்னை மரங்களில் இருந்து தேங்காய் நல்ல முறையில் உற்பத்தியாவதை கண்கூடாகக் கண்டோம் .அதே நீரினை மாட்டுக்கு தீவனமாகும் புல்லுக்கும் பாச்சினோம். செயற்கை உரங்கள் இல்லாமலேயே புல் நல்ல முறையில் விரைவாக வளர்ந்தது. அதனால் எங்களுக்கு சொந்தமான க.ச. எண் 568,569/1 கொண்ட 2 ஏக்கர் நிலமுள்ள புதுப் பாளையத்தில்
மீன் பண்ணை அமைத்து விவசாயத்தை பெருக்க திட்டமிட்டோம்.அதற்காக 25 சென்ட் பரப்பில் குட்டையை ஏற்படுத்தினோம் என வேலுமணி கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, எனது கணவரின் நண்பர் நரசிபுரம் ராஜசேகரன் மிகப்பெரிய மீன் பண்ணை நடத்தி வருகிறார். அவரிடமிருந்து , பிறந்து ஒரு மாதமே ஆன மீன் குஞ்சுகளை வாங்கி வந்து நாங்கள் அமைத்து இருக்கின்ற பண்ணையில் விட்டுவிடுவோம் .
பண்ணை அமைக்கும் போதே மாட்டு சாணத்தை பண்ணை முழுவதும் பயன்படுத்துவோம். அந்த மாட்டு சாணத்தில் இருந்து வரும் புழுக்கள் மீன்களுக்கு உணவாகும்.
மேலும் மீன் உணவுகள் தற்பொழுது எல்லா இடங்களில் விற்பனை செய்கிறார்கள். சோளம், கம்பு, கருவாட்டு தூள் ஆகியன கலந்த ,கலவை தான் அந்த மீன் உணவு. அதனையும் வாங்கி வந்து மீனுக்கு உணவாக்குவோம் .
8 முதல் 12 மாதங்கள் வரை அந்த மீன்கள் பெரிதாகும். கட்லா, ரோகு ,ஜிலேபியா ஆகிய மீன் வகைகளை உற்பத்தி செய்து உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம்.
பண்ணைக்கு தொடர்ந்து நீர் வருமாறு செய்துள்ளோம். அந்த நீர் வெளியேறி கழிவு நீராக வெளியேறுவதை விவசாயத்திற்கு பயன்படுத்தி,நல்ல மகசூல் கண்டு வருகிறோம்.
குறிப்பாக 75 தென்னை மரங்களை பராமரித்து வருகிறோம். அதற்கு கழிவுநீரை பயன்படுத்துவதற்கு முன்பு வெறும் 1000 தேங்காய்கள் மட்டுமே காய்ந்தது.பின்பு இந்த கழிவு நீரை பாய்ச்சிய பின்பு 1500 தேங்காய்கள் நல்ல பருப்புள்ள பெரிய காயாக உற்பத்தியாவதை கண்டு மகிழ்ந்தோம் . இதனைப் பார்த்து தேங்காய் வியாபாரிகள், விரும்பி அதிக விலை கொடுத்து வாங்கி செல்கிறார்கள் .மேலும் பயிரிட்ட வெங்காயத்திற்கு இந்த கழிவு நீரை பாய்ச்சிய பொழுது வெங்காயம் நல்ல முறையில் உற்பத்தியானது .அழுகல் ஏற்படவில்லை .மூன்று மாதங்கள் வரையில் பட்டறையில் வைத்து விற்பனை செய்தோம் .தொடர்ந்து பச்சை மிளகாய், வெண்டைக்காய் ,தக்காளி ஆகியவற்றிற்கு இந்த மீன் பண்ணை கழிவுநீரை செலுத்த உள்ளோம். இயற்கை முறையிலான இந்த கழிவுநீரில் அமோனியம், பொட்டாசியம் ஆகியவை உள்ளதால் பயிர்கள் நல்ல வளர்ச்சி பெறுகிறது .கடந்த 3,4 ஆண்டுகளாக இதனை பயன்படுத்தி வருகிறோம். இதுவரை யாரும் குறைபாடு இருப்பதாக சொல்லவில்லை .
இந்த ஒருங்கிணைந்த விவசாய உற்பத்திப் பொருள்களின் மூலம் நமது உடல் நலம் ஆரோக்கியம் பெறுகிறது.
இந்த கழிவுநீரால் கிடைக்கும் உரத்தினை பயன்படுத்துவதற்கு, அரசு பல சலுகைகளை வழங்கினால் இன்னும் இதனை மேம்படுத்த முடியும் என வேலுமணி குறிப்பிட்டார் .

scroll to top