இந்தியாவில் கொரோனா 4ஆம் அலை ஏற்படாது: தொற்றுநோயியல் நிபுணர் கருத்து

இந்தியாவில் கொரோனா நான்காம் அலை பாதிப்பு ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், தொற்றுநோயியல் நிபுணருமான ஜேக்கப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் அடிப்படையில் நான்காம் அலை ஏற்பட வாய்ப்புகள் குறைவு எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொற்றுநோயியல் (வைராலஜி) நிபுணர் ஜேக்கப் ஜான், கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் கொரோனா மூன்றாம் அலை குறைந்து வருகிறது. கொரோனா மூன்றாம் அலையின் தொடக்கத்தில் 3.4 லட்சத்திற்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகியது. கடந்த நான்கு வாரங்களாகவே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் குறைந்து வந்துள்ளது. இதனால் தற்போது கொரோனா மூன்றாவது அலையின் இறுதிக்கட்டத்தை நாம் எட்டியுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறினார். இரண்டாவது அலையின்போது, கொரோனா மூன்றாவது அலை ஏற்படாது என்று நிபுணர்கள் முன்பு கருத்து தெரிவித்திருந்தனர். மூன்றாவது அலை ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்பட்டது. ஒமைக்ரான் வகை மாற்றமடைந்த வைரஸை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்தநேரத்தில் இருந்த மாற்றமடைந்த கொரோனா வகையைக் கொண்டே மூன்றாவது அலை ஏற்படாது என்ற கருத்து நிலவியது என்று கூறினார்.

scroll to top