உக்ரைன் நாட்டின் மீது கடந்த மாதம் 24-ந் தேதி ரஷியா போரை தொடங்கியது. தலைநகா் கீவை கைப்பற்றிவிட்டால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ரஷிய கீவ் நகரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆனால், அங்கு உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக ரஷிய படையினரால் கீவ் நகருக்குள் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இதனால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷியா. அந்த வகையில் உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ், தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் மற்றும் வடகிழக்கு நகரமான சுமி ஆகிய நகரங்களில் ரஷிய படைகள் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வந்தன. இதனால் அந்த நகரங்களில் சிக்கியிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் உக்ரேனியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக சுமி நகரில் 700-க் கும் அதிகமான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி யுத்த களத்தில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர்கள் சுமி நகரில் இருந்து வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பையும் இந்தியா கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய 4 நகரங்களிலும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா நேற்று அறிவித்தது. அந்த நகரில் சிக்கியுள்ள பாதுகாப்பாக வெளியேறவும், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷியா அறிவித்தது. இந்தநிலையில், மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில், காலை 10 00 மணி முதல் (மாஸ்கோ நேரம்) ரஷியா மீண்டும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியர்கள் வெளியேற உதவுவதற்காக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது. சுமி பகுதியில் உள்ள இந்தியர்கள் வெளியேற உதவ ரஷியாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் வெளியேற ரஷியா மீண்டும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிப்பு
