இது ஒரு தொடர்கதை:மதுக்கரைக்கு சிறுத்தைப்புலி வந்தது எப்படி?

தி கோவை ஹெரால்டு:

புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்தான். அதற்காக ஊரே அல்ல உலகமே நடுங்க வேண்டுமா என்ன? அப்படித்தான் கோவை மதுக்கரையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலியின் சிசிடிவி கேமரா படக்காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாக, அதைப் பார்த்தவர்கள் எல்லாம் அய்யோ என்று அலறாத குறையாக ஒருவருக்கொருவர் பதற்றத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி என்னதான் காட்சியை கண்டார்கள். ஒரு நாயும் பையனும் தெருவில் ஓடுகிறார்கள். வரிசையாய் அடுக்கு மாடிக்குடியிருப்புகள். அங்கிருந்த ஒரு பங்களாவின் பிரதான கேட் திறக்கப்படுகிறது. ஒரு பெண்மணி தென்படுகிறாள். அவ்வளவுதான் எதிர் வீட்டின் பகுதியிலிருந்து அதிவேகத்தில் ஓடி வருகிறது அந்த உருவம். உற்றுப்பார்த்தால்தான் அது சிறுத்தை எனத் தெரிகிறது. அதைப் பார்த்ததுதான் தாமதம். அய்யோ என்று கதவை சாத்திக்கொண்டு ஓடுகிறார் அந்தப் பெண்மணி. பாய்ந்து சென்ற சிறுத்தை கேட்டின் மீது பிறழ்ந்து விழுந்து திரும்பி ஓடுகிறது.
இதையடுத்து இன்னொரு வீடியோ. ஒரு பெரிய மதில் சுவர். அதையொட்டி ஒரு கேட், சிறு, சிறு அறைகள். அந்த மதில் சுவரின் ஓரம் வரும் பெரிய உருவம், ‘அட சிறுத்தை. எம்மாம் சைசு?’ மதில் சுவரில் ஏறுகிறது. கீழே குதிக்கிறது. அப்படியே நகர்கிறது. இருட்டில் அதன் உடம்பில் உள்ள பெரிய புள்ளிகள் மினுங்குகின்றது. அவ்வளவுதான். வேறெங்கோ தவ்வி செல்கிறது. இப்படி எத்தனை வீடியோக்கள் மக்களிடம் வலைத்தளங்களில் புழங்குகிறது என்றே தெரியவில்லை.
இந்த சம்பவம் நடந்த இடம் கோவை மதுக்கரை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில்.கடந்த நான்கு நாட்களாக சுற்றித்திரியும் சிறுத்தை இங்கே உள்ள மக்களுக்கு பயம் காட்டிக் கொண்டிருக்கிறது. பலர் வீடுகளை காலி செய்து கொண்டு ஓடி விட்டனர். இந்த மதுக்கரை ஏரி்யாவில்தான் சிமெண்ட் பாக்டரி இருக்கிறது. அதற்கு தாது எடுக்கப்படும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மலையும், மலைச்சுரங்கங்களும், அதையொட்டிய பரந்து விரிந்த காடுகளும் இருக்கின் றன. சுண்ணாம் புக்கல் சுரங்க ங்கள் சிமெண்ட் பாக்டரியின் கண்ரோல் என்றால், காடுகள் ஃபாரஸ்ட்டின் கட்டுப்பாட் டில். இந்த ஃபாரஸ்ட்டில் கரடி, செந்நாய், யானைகள், ராஜநாகம், நரிகள், கரடி என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது அவை காடுகள் தாண்டி, குவாரிகள் கடந்து ஊருக்குள்ளும் புகுந்து வீடுகிறது. அப்படித்தான் கடந்த வருடம் இதே ஜனவரி மாதம் 21-ந்தேதி இங்குள்ள குவாரி ஆபீஸ், காந்திநகர், வட்டப்பாறை பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. அது ஒரு வீட்டில் உள்ள நாயைப் பிடித்துத்தின்றது. பிறகு வட்டப்பாறை பகுதியில் இருந்த தோட்டத்தில் நான்கு ஆடுகளை கடித்துக் கொன்றது. வனத்துறைக்கு புகார் செல்ல, அவர்கள் கூண்டு வைத்து அதனைப் பிடித்து சத்தியமங்கலம் காடுகளில் கொண்டு போய் விட்டனர். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் மதுக்கரை சூட்டிங் ரேஞ்ச் மலையில் நாய் ஒன்றை சிறுத்தை பிடிக்கும் வீடியோ பதிவாகி வைரலானது. இப்படி இப்பகுதியில் சிறுத்தைகள் வருவதும் ஆடுகளை, நாய்களை கவ்விச் செல்வதும் அடிக்கடி நடந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில்தான் இதே ஏரியாவான சுகுணாபுரம் பகுதியில் தன்னாசி ஆண்டவர் கோயில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்களிடம் புகார் கிளம்பியது. அடுத்தது பக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி சிசிடிவி கேமராவில் சிறுத்தைப் பதிவானது. இதையடுத்தே இந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக ஊருக்குள் புகுந்து இங்குள்ள மக்களுக்கு திடீர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. புகார் வனத்துறைக்கு செல்ல, அவர்கள் வந்து சிறுத்தை பி.கே.புதூர் என்ற பகுதுியில் உள்ள பழைய குடோனில் தங்கியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர் இந்த குடோனில் தனியார் நிறுவனத்தின் பழைய பொருட்களை வைத்துள்ளனர். பொங்கல் விடுமுறை முடிந்து வந்த ஊழியர் ஒருவர் குடோனிற்கு சென்று பார்த்த போது சிறுத்தை குடோனில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தது. இதனை கண்டவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர், குடோன் கதவை மூடிவிட்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து அந்த குடோன் முழுவதும் இருந்த ஓடுகளில் வலை விரித்துள்ளனர்.
குடோனில் இருந்து வெளியேற இரண்டு வழிகள் இருந்தன. அந்த இரண்டு வழிகளிலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைத்தனர். அதனைச் சுற்றியும் வலை அமைக்கப்பட்டது. சிறுத்தை தப்பிச் செல்லாமல் இருக்க அந்த குடோன் முழுவதும் வலையால் மூடப்பட்டு இருந்தது. பின்னர், வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 3 நாட்களுக்கு மேலாக சிறுத்தை கூண்டில் சிக்குமா? என இரவு முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத்துறை அலுவலர்கள், வன ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சுற்றுவட்டாரக்காடுகளில் காட்டுப் பன்றிகள் பெருத்துப் போச்சு. போதாக்குறைக்கு நாய்கள் வீட்டுக்கு வீடு வளர்த்துகிறார்கள். அதுதான் இங்கே அதைப் பிடிக்கவே சிறுத்தைகள் வருகின்றன. அவற்றை பாதுகாக்கவே நாம் நட வடிக்கை எடுக்க வேண்டும். எனவே தெருநாய்கள் வளர்ப்பதை, வீடுதோறும் குறைக்க வேண்டும். அப்போதுதான் இங்கே இந்த சிறுத்தைப்புலியிடமிருந்து எங்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும்!’’ என்றனர்.

சேதமில்லாமல் பிடிபட்ட சிறுத்தை

இரண்டு கூண்டுகள் வைத்துக் காத்திருந்த நிலையில் ஐந்து நாட்களாக வனத்துறைக்கு டிமிக்கி கொடுத்து குடோனுக்குள்ளேயே பதுங்கியிருந்த சிறுத்தை வெள்ளிக்கிழமை நடு இரவில் அகப்பட்டது. பொதுவாகவே சிறுத்தைகள் ஒரு முறை இரை விழுங்கி விட்டால் ஆகாரம் இன்றி 3 முதல் 5 நாட்கள் கூட சாப்பிடாமல் இருக்கும். அதற்குமேல் பசி தாங்காது. எனவே சிறுத்தை வந்துதான் ஆகவேண்டும் என்று வனத்துறையினர் மதுக்கரை குடோனுக்குள் 2 கூண்டுகள் வைத்துக் காத்திருந்த நிலையில் 6-ம் நாள் இரவு குடோனை விட்டு வெளியே வந்தது. அது இரைதேடி கூண்டுக்குள் நுழைவதை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்தபடி இருந்த வனத்துறையினர் கூண்டின் மூடியை இழுத்து விட, சிறுத்தை வாகாக அகப்பட்டுக் கொண்டது. அதை எந்த தொந்தரவும் இல்லாமல் கொண்டு போய் சத்தியமங்கலம் காட்டில் விட்டனர் வனத்துறையினர். தற்போது மதுக்கரை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

scroll to top