முனைவர் த.சத்தியசீலன்
மனித வரலாற்றில் இடப்பெயர்வு காலம் காலமாக நடைபெறும் தொடர் நிகழவாகும். இடம் பெயர்தலுக்கும், குடியேற்றத்திற்கும் வரலாற்றில் முக்கியப் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் வரலாறே, இடம் பெயர்ந்து வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களிடம், நாம் போராடி பெற்ற சுதந்திரத்தின் மீது தான் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேயிலை உற்பத்தித் தொழில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதற்கு முன் அஸ்ஸாம் மாநிலத்தில் தான் தேயிலை விளைந்தது. அதன் பின்னர் நீலகிரி தேயிலை புகழடையத் தொடங்கியது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர், கூடலூர், நடுவட்டம், பந்தலூர் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் ஓரிரு தலைமுறைக்கு முன்னரே இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களாவர். கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் பிற இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.
ஓரிரு தலைமுறைகளாக தேயிலை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் இத்தொழிலாளர்கள் மற்றும் இவரது பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக நகரங்களை நோக்கி நகர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மறு இடப்பெயர்வு மற்றும் இடம் பெயரும் சூழலுக்கும் தள்ளப்பட்டு விட்டனர்.
ஏற்கெனவே கூலி பற்றாக்குறை, வன விலங்குகள் மோதல், மருத்துவ வசதிகள் இன்மை, போதிய போக்குவரத்து வசதிகளின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கானத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு வழங்கிய குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் பலருக்கு, இன்னும் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாத நிலை உள்ளது. இதில் தொழிலாளர்களின் இடப் பெயர்வு தேயிலைத் தொழிலின் எதிர்காலத்தை விளிம்பு நிலைக்கு நகர்த்திச் செல்கிறது. நம் மண் சார்ந்த தொழிலை அழியாமல் தடுத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டுச் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
காரணம் பலகோடி மக்களின் நுகர்வு பானம் இந்த தேயிலை. உற்பத்தி நின்று போனால் அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் மட்டும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் இல்லாமல் போய்விடும். இறக்குமதி அதிகரித்தால் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்குச் சென்றால் மேலும் விவரிக்கவே வேண்டாம். இன்று அனைத்து மக்களாலும் விரும்பி பருகக்கூடிய இந்த எளிய பானம், ஒரு தரப்பு மக்கள் மட்டுமே பருகக்கூடிய உயர்தர பானமாக மாற்றப்படும்.
தேயிலை வளர்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் ஏற்ற காலச் சூழ்நிலை தமிழகத்தில் நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் மட்டுமே உள்ளது அறுதியிட்டுக் கூறி விட முடியும். உலக அளவில் வரவேற்பைப் பெற்ற இந்த தேயிலையை உற்பத்தி செய்ய, நாடு விட்டு நாடு, ஊர் விட்டு ஊர் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களைத் தக்க வைத்து, தேயிலைத் தொழிலையும் செழிப்படையச் செய்ய வேண்டும் என்று அரசிடம் மன்றாடுகிறது, பல்லாயிரக்கணக்கானோரின் உள்ளம்.