THE KOVAI HERALD
சமீபத்தில் வெளியான திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்துக்கள் குறித்த பேச்சு பற்றிய வீடியோ தமிழக அரசியல் புது புயலைக்கிளப்பியுள்ளது. அதற்கு தமிழக பாஜகவினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதைப் பற்றி, ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என பதிவிட்டு குறிப்பிட்ட ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு பதிவையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஆ.ராசா, “இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. கிறிஸ்துவராக இல்லையென்றால், இஸ்லாமியராக இல்லையென்றால் நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்கிறது அது. இப்படிபட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்” என்று நீள்கிறது ராசாவின் பேச்சு.
இந்த காணொளியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
இப்போது இந்த விவகாரம் பல்வேறு அரசியல் கட்சிகளின் மேல்மட்டத்திலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. வலைத்தளங்களிலும் மனம்போன போக்கில் இதைப் பற்றிய விமர்சனங்கள், கண்டனங்கள் வந்தபடி உள்ளன. இதேபோல் கடந்த தேர்தல் நேரத்தில் முன்னாள் முதல்வர் குறித்து ஒரு சர்ச்சைப் பேச்சைப் பேசினார்.
அதில் பெண்களை கொச்சைப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், ‘என் பேச்சை ஒட்டியும், வெட்டியும் திசைதிருப்பி அவரவர் அரசியலுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். நான் முதல்வரையோ, அவர் குடும்பத்தையோ அவதூறாக ஏதும் பேசவில்லை!’ என்று மறுத்திருந்தார். அதன் பின்னணியில் அவரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டது. அதற்குப் பிறகு இப்போதும் அவர் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
S.KAMALA KANNAN Ph. 9244319559