ஆன் லைன் சூதாட்டம் – கடந்து வந்த அரசியல்

download.jpeg

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதுதான் கடந்த வார அரசியலின் ஹைலைட். இனி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவோரும், அதை விளம்பரப்படுத்துவோரும் இச்சட்டப்படி தண்டிக்கப்படுவர். இந்த சட்டம் நிறைவேற தமிழகம் கடந்த வந்த அரசியல் பாதை அசாதாரணமானது. அதைப் பற்றிய சுருக்கமான வரலாறு:

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த 45 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னே இச்சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, ஏற்கெனவே உள்ள விதிகளின்படி இதை கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது. அக்டோபர் 1,2022: தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா’ உருவாக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. பிறகு, இந்த மசோதா கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, ஆளுநரும் ஒப்புதல் அளித்து சட்டம் அமலானது.

இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ, வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள், விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பணம் வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

அக்டோபர் 19,2022: கடந்த அக்டோபர் மாதம் நடந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்துக்கு மாற்றாக, அக்டோபர் 19ஆம் தேதி சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, 24 மணி நேரத்தில் விளக்கங்களை தமிழக அரசு அளித்தது. டிசம்பர் 02,2022: சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த டிசம்பர் 2ம் தேதி ஆளுநரை சந்தித்து, வலியுறுத்தினார்.

இதற்கிடையே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஆளுநர் ரவி, சந்தித்துப் பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது

மார்ச் 6,2023 சட்டம் இயற்றி 6 மாதங்கள் ஆன நிலையில், அதன் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தார் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த மாதம் 6ஆம் தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார். மார்ச் 23,2023: இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் மசோதாவின் மீது பேசினர்.இதனையடுத்து இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்

அதே நாளில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது இந்த மசோதா குறித்து விவாதித்துள்ளதாகக் கூறப்பட்டது. சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள்” என்று பேசினார். அதும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு மீண்டும் விவாதப்பொருளானது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆளுநருக்கு எதிராக கடுமையான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன/ அதன் பிறகே தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து இருக்கிறார்.

scroll to top