ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் கோவை காந்திபுரம், சோமனூர் வழித்தடத்தில் பேருந்து ஓட்டி வருகிறார் ஷர்மிளா.
ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மகேஷ் தான் தனக்கு ஊக்கம் அளித்ததாகவும் அவரது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்த ஷர்மிளா, தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியிருக்கிறார் என்று கூறினார். ஷர்மிளா கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றுள்ளார். ஏழாவது வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது என்றும் வீட்டிலும், தன்னுடைய விருப்பத்திற்கு ஒப்புதல் கிடைத்ததாகவும் கூறுகிறார். 2019 முதல் கோவையில் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும் தற்போது பேருந்தை கையில் எடுத்துள்ளதாகவும் கூறினார்.
ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போது கோவை காந்திபுரம், சோமனூர் ரூட்டில் பேருந்து ஓட்டி வருவதாகவும் கூறுகிறார்.