அரசு பள்ளிகளில் போதுமான வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில்  கொரோனா தொற்றின் மூன்றாவது அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பொங்கல் பண்டிகை முன்பாகவே பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன  40 நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து  பள்ளிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தூய்மை பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டதுடன், பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை எனவும்  நேரடி அல்லது ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, தனியார் பள்ளிகளில் கேட்கப்படும் கல்விக்கட்டணத்தை கட்ட முடியாத நிலை மற்றும் அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகள் காரணமாக, ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் இருந்து விலக்கி, அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதன் காரணமாக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் இரு மடங்கு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வகுப்பறைகளோ, போதிய அளவிலான ஆசிரியர்களோ இல்லாத நிலையே நீடித்து வருகிறது. ஆனால், இதை அரசு கண்டுகொள்ளாமல், இன்று முதல் முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவித்து விட்டதால், பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமரவைப்பதில் சென்னையில் உள்ள பல மாநகராட்சி நடுநிலை மற்றும் தொடக்கப்  பள்ளிகள் தடுமாறின. குறிப்பாக வடசென்னையின் பல பள்ளிகளில் இதுபோன்ற காட்சகிள் காணப்பட்டன.  மாணவர்களை அமர வைக்க போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையில், மாணவர்களை பள்ளியின் வராண்டாவில் அமர வைத்துள்ளனர். இதைக்கண்ட பெற்றோர்கள் பலர் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

scroll to top