சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்டத்தின் கீழ் இளைஞர்களின் திறனை மேம்படுத்து
வதற்காகவும், இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், வேலைக்கேற்ற திறன் குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை ஒருங்கே பெறுவதற்கும், வேலை வாய்ப்பிற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவதற்கும் மற்றும் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பினை பெற்றிட ஏதுவாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில், இளைஞர் திறன் திருவிழா 19.07.2022 அன்று செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி;யில் ‘இளைஞர் திறன் திருவிழா” நடைபெறவுள்ளது. இம்முகாமில், உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் பங்கு பெற்று வேலைநாடும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு தேர்வு செய்யவுள்ளனர். இளைஞர்கள் தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில்நுட்ப தகுதி, சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை, உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சியுடன் சிறந்த வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம். எனவே, வேலைநாடும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.