அன்றைக்கு என் ஆசிரியர்கள் போட்ட பிச்சை எனது வளர்ச்சி:தான் படித்த பள்ளியில் கனிந்துருகிய நடிகர் சிவகுமார்.

Pi7_Image_1660841198723.jpg

  THE KOVAI HERALD:

கம்பராமாயணம், மகாபாரதம், திருக்குறள் கதைகள் 100 என அரங்கேற்றம் செய்யும் இந்த அறிவும், ஆற்றலும், தெளிவும், சிந்தனையும் என் ஆசிரியர்கள் போட்ட பிச்சை என்று கனிந்துருகினார் திரைப்பட நடிகர் சிவகுமார். தான் படித்த அரசுப் பள்ளிக்கு வந்திருந்த அவர் இவ்வாறு மாணவர்களிடையே உரையாற்றினார்.

திரைப்பட நடிகரும், எழுத்தாளரும், சொற்பொழிவாளருமாக விளங்குகிற சிவகுமாரின் சொந்த கிராமம் கோவை சூலூர் கலங்கல் அருகே உள்ள காசிகவுண்டன்புதூர். குக்கிராமமான இங்கு பிறந்து வளர்ந்து உள்ளூரில் ஆரம்பக்கல்வியை முடித்து சூலூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கற்றுத்தேர்ந்த அவர் சென்னை ஓவியக்கல்லூரியில் கற்றுத்தேர்ந்தார்.

அடிப்படையில் ஓவியக்கலைஞரான அவர் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வர தமிழ் திரைப்படங்களில் தோன்றினார். கிட்டத்தட்ட 90 திரைப்படங்களில் நடித்த அவர் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் மட்டுமல்லாது, சிவாஜிகணேசனுடனும் நெருக்கம் கொண்டவர். இவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி மற்றும் மருமகள் ஜோதிகாவும் திரைநட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள். மகள் பிருந்தா பின்னணிபாடகராகவும் அவ்வப்போது தமக்கான கலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது அந்தக்காலத்தில் தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சிகள் மூலம் மக்களுக்கு தந்து ஓவியக்கலைக்கு தனிப்பட்ட பெருமையைப் பேணி வருகிறார்.

இந்த அபார வளர்ச்சியிலும் கூட கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களை கற்றுத் தேர்ந்து எளியவருக்கும் புரியும் வண்ணம் கதைபாணியில் மோனோ ஆக்டிங்குடின் அரங்கேற்றம் செய்து தனக்கென தனியிடத்தை  பெற்றார் சிவகுமார். மேலும் இது ராஜபாட்டை அல்ல என்ற நூல் தொடங்கி கம்பன் எனும் மானுடன், சிவகுமார் டைரிக்குறிப்புகள், கொங்குதேன், சித்திரச்சோலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தனித்திறன் வாய்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராகவும் விளங்குகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் திருக்குறள் 100 என்ற தலைப்பில் ஈரோடு புத்தகத்திருவிழாவில் கதை சொல்லும் அரங்கேற்றம் கண்டார். அதாவது மணி மணியான 100 குறள்களை தேர்ந்தெடுத்து இந்த சமூகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த பெரிய மனிதர்கள் முதல் ஏழை எளிய மனிதர்கள் வரை பாத்திரங்களாக உருவாக்கி குறளுக்கு ஒரு கதை வீதம் மேடையில் சொன்னார். ஒரு குறளுக்கு ஒன்றரை நிமிடம் முதல் இரண்டு நிமிடம் வரை எடுத்துக் கொண்டு 100 கதைகளை 4 மணி நேரத்தில் சொல்லி முடித்தார்.

அநேகமாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசத்தில் உலகத்தில் கூட நான்கு மணி நேரம் 100 கதைகளை சொன்ன கதைசொல்லிகள் யாருமே இல்லை. அந்த அரும் பெரும்சாதனையை பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் நிகழ்த்தினார். இதையடுத்து கடந்த 18-ந்தேதி வியாழன் மாலை தான் பிறந்த ஊரான காசிகவுண்டன்புதூரில் உள்ள தன் பூர்வீக வீட்டிற்கு தன் மனைவியுடன் வந்தார். தன் பூஜையறையில் உள்ள இஷ்ட தெய்வம் தண்டாயுதபாணிசுவாமியை தரிசித்தார். அங்குள்ள உறவுக்காரர்களோடு அளவளாவி விட்டு  ஊரில் பழமைவாய்ந்த கோயில்களான பரமசிவம் கோயில், விநாயகர் கோயில்களுக்கு சென்று வழிபட்டார்.

இதற்கு முன்னதாக தான் படித்த சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று உரையாற்றினார். அங்கும் தன் பள்ளி அனுபவங்களை மாணவர்களிடையே பேசினார்.

‘‘நாங்கள் அந்தக்கால ஆசிரியர்களிடம் எப்படியெல்லாம் கல்வி கற்றோம். அவர்கள் எப்படியெல்லாம் கண்டிப்பும் அன்பும் காட்டி கல்வி கற்பித்தார்கள் என்பதையெல்லாம் உணர்வுப்பூர்வமாகப் பேசி, ‘அவர்கள் போட்ட கல்வி எனும் பிச்சைதான் இன்றைக்கு நான் வாழ்க்கையில் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன். அவர்கள் சொல்லிக் கொடுத்த கல்விதான் மணிக்கணக்கில் ராமாயணம் மகாபாரதம், திருக்குறள் கதைகளை எல்லாம் கற்றுப் பேச வைக்கிறது!’’ என்று குறிப்பிட்டார். இதே பள்ளியில் படித்த மாணவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி. அதேபோல் போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரையும் இப்பள்ளியில் படித்தவர்கள்தான். அவர்களும் தம் பால்ய கால அனுபவங்களைப் பற்றிப் பேசினார். மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும், பரிசுகளையும் நடிகர் சிவகுமார் வழங்கி, வந்திருந்தவர்களை எல்லாம் சால்வை அணிவித்து கெளரவித்தார்.

S.KAMALA KANNAN Ph. 9244319559

scroll to top