மராட்டிய மாநிலம் புனேவில் மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி பேசுகையில், நீர் மேலாண்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ‘நதி உத்சவ்’ என்ற பெயரில் விழாக்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த விழாக்கள், மக்களுக்கு ஒவ்வொரு துளி நீரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் என்று அவர் கூறினார். மேலும் அனைத்து நகரங்களிலும் பசுமை போக்குவரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறினார். அனைத்து நகரங்களிலும் நவீன கழிவு மேலாண்மை அமைப்பு இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.