THE KOVAI HERALD:
திமுகவில் பத்து எம்எல்ஏக்கள் தங்களுடன் பேசி வருவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவில் ஐம்பது எம்எல்ஏக்கள் திமுக அணியுடன் பேசி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் மாறி மாறி பேசியது தமிழக அரசியலில் ஒரு வித வேடிக்கையான கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘‘திமுகவாக இருந்தால் என்ன அதிமுகவாக இருந்தால் என்ன கட்சி என்ற அளவில்தான் அவை எதிர் எதிர்கட்சிகள். அதில் உள்ள எம்.எல்.ஏ, எம்பிக்கள் எல்லாம் அவரவர் ஊரில் மாமன் மச்சினன், பங்கும், பங்காளிகள்தானே. சீர் சிறப்பு, கல்யாணம், துக்க வீடு என்று எங்கெங்கும் அவர்கள் கலந்து பேசிக் கொள்வது சகஜம்தானே?’’ ஒரு சாரார் கிண்டலடித்தாலும், இன்னொரு சாரார் இதில் உள்ள சீரியஸ்தன்மையையும் விவாதிக்கவே செய்கின்றனர்.
முதலில் இந்தப் பேச்சு எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்.
அதிமுக தலைமையை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில், மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அக்கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்பது தெரியாமல் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களின் இல்லத் திருமண விழாக்களில் பங்கேற்று வருகிறார்.
அதன் ஒருபகுதியாக சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி ஒருவரது இல்ல காதணி விழாவில் கலந்துக்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு நிருபர், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் திமுகவில் இணைய உள்ளதாக பேசப்படுகிறதே!’’ என்ற கேள்வியை எழுப்ப, பதிலளித்த பழனிசாமி, ‘‘திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் 10 பேர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்!’’ என்று தடாலடியாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் நானும் ஒரு தொண்டன் அந்த வகையிலேயே இன்று இந்த திருமண விழாவில் பங்கேற்றேன். தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாததால் சசிகலா, தினகரன், ஓ.பன்னீர் செல்வத்தை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம்!’’ என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேட்டிக்கு பதிலளிக்கும், வகையில் யார் அந்த பத்து எம்.எல்.ஏக்கள் என்ற தகவளை எடப்பாடி பழனிசாமி வெளியிட தயாரா? என்று கேள்வி திமுக தரப்பில் கேள்வி எழுப்பி வந்தனர். இதன் உச்சமாக, ‘‘அதிமுகவின் எம்எல்ஏக்கள்தான் ஐம்பது பேரும், முப்பது மாவட்ட செயலாளர்களும், இரண்டு எம்பிக்களும் எங்களிடம் தொடர்பில் உள்ளனர். பேசியும் வருகின்றனர். அவர்கள் சொன்ன பத்து எம்எல்ஏக்களின் பெயரை வெளியிட்டால் நாங்கள் இவர்களின் பெயரையும் வெளியிடுவோம்’’ என்று தெரிவித்தார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலருடன் பேசினோம்.
‘‘எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை ஒரு கட்சியின் முன்னணித்தலைவர். ஒரு நிருபர் கேள்வி கேட்டதற்காக உண்மையல்லாத ஒரு தகவலை தெரிவிக்க முடியாது. அதேபோல் திமுக ஆர்.எஸ்.பாரதியும் திமுகவின் முக்கியமான நிர்வாகிகளில் ஒருவர். அவர் பேசியதையும் ஏதோ திண்ணைப் பேச்சு போல் விட்டு விட முடியாது. இரண்டுமே நிச்சயம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அதிமுக எம்பிக்களைப் பொறுத்தவரை யார் அணியில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். அதை வெளிப்படையாக சொல்ல வேண்டியதில்லை.
அதேபோல் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் திமுகவுடன் பேசி வருவதற்கு நிச்சயம் வாய்ப்புண்டு. அதன் எண்ணிக்கையில் மட்டுமே மாறுபாடே ஒழிய, இங்கிருந்து அங்கே பேசவே இல்லை என்று சொல்ல முடியாது. ஈபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி மீது வைக்கும் பிரதான குற்றச்சாட்டே திமுகவுடன் உறவு வைத்துள்ளது என்பதுதான். சரி ஈபிஎஸ் சொன்னதில் எந்த அளவு உண்மை என்பதைத்தான் இப்போதைக்கு ஆராய வேண்டும்
அடுத்த பொதுத் தேர்தல் வருவதற்குள் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி அதில் முக்கியஸ்தர்கள் மீது ரெய்டு நடவடிக்கை எடுக்க உள்ளது. அப்படி செய்தால்தான் மக்களவைத் தேர்தலில் அக்கட்சியை டேமேஜ் செய்ய முடியும் என்பது அதன் கணக்கு. அவர்கள் நகர்த்தும் காய்கள் எப்படியெல்லாம் தங்களை விழுக வைக்கும் என்பதை சம்பந்தப்பட்ட திமுகவினர் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே அவர்கள் எல்லாம் இப்போது பாஜகவுடனும், அதிமுகவுடனும் பேசியும் வருகிறார்கள். அவரவரைக் காப்பாற்றிக் கொள்வதுதான் அவர்களுக்கு நோக்கம்.
அந்த வகையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் தன் மீது நடவடிக்கை வராது இருக்க குறிப்பிட்ட எம்.எல்.ஏக்களை கையில் வைத்துக் கொண்டு திமுகவை விட்டு வெளியே வந்து விட திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அதற்கேற்ப ஒரு டீமை அதிமுக டீம் உருவாக்கியும் இருக்கிறது. அதை புரிந்து கொண்ட திமுகவும் சளைத்ததாக இல்லை. 2023 தொடக்கத்திலேயே அதிமுக முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் பலர் மீது இப்போது விசாரித்து வரும் வழக்குகளை வைத்து கைது நடவடிக்கை எடுக்க உள்ளது.
அதில் தப்பிக்கவும் சில எம்எல்ஏக்கள் திமுக பக்கம் சாய்வது நடந்து வருகிறது. இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் பாஜக தங்களிடம் வந்து விடு; உனக்கு வேண்டிய பணியெல்லாம் செய்து தருகிறேன்!’’ என்று அந்தந்த ஏரியா தலைவர்கள் மூலம் பேசி வருகிறது. ஆக, எல்லாவற்றுக்கும் மையப்புள்ளி 2023 ஆம் ஆண்டுதான். அப்போது இந்த இரண்டு கட்சிகளுக்கும் நடக்கும் முக்கிய நேரடி சண்டையையும், தாவும் எம்எல்ஏக்களையும் வெகுவாகக்காணலாம். அதைப் பார்த்கும்போதுதான் இப்போது எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுக்கும், ஆர்எஸ்பாரதி சொன்ன சங்கதிக்குமான நெருக்கம் மக்களுக்கு மட்டுமல்ல, உங்களைப் போன்ற மீடியாக்களுக்கும் தெரிய வரும்!’’ என்றார்கள்.