அதிமுகவின் ஐம்பதாண்டு நிறைவுக் கொண்டாட்டம்:எம்ஜிஆர் அன்றே சொன்ன அதிமுகவின் வெற்றிச்சரித்திரம்

Pi7_Image_FB_IMG_1665725090548.jpg

THE KOVAI HERALD

ஐம்பது ஆண்டுகள் முழுமையாக முடிந்து ஐம்பத்தியோரவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அதிமுக. இப்படியான வரலாற்று நிகழ்வு மற்ற மாவட்டங்களில் எப்படியெல்லாம் கொண்டாடப்படுகிறதோ இல்லையோ கோவை மாவட்டத்தில் தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவு கொண்டாடப்பட வேண்டும் என்ற ஏற்பாடுகளை செய்து வருகிறார் அக்கட்சியின்  தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி.

சமீபத்தில் அத்தனை நிர்வாகிகளையும் இதற்காகக் கூட்டிய அவர், ‘‘எம்ஜிஆரால், அதிமுக என்ற பேரியக்கம் உருவாக்கப்பட்டு புரட்சி தலைவி அம்மா அவர்களால் ஒன்றைக் கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்தது. தற்பொழுது கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில்  51 ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கின்றது. கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்து எண்ணற்ற நல்ல திட்டங்களை வழங்கி சேவையாற்றியுள்ளது. வரும் 17 ஆம் தேதி கழகத்தின் 51 ஆம் ஆண்டு துவக்கவிழாவை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு கிளைகழகங்களிலும் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடவேண்டும். ஆண்டு விழாவையொட்டி கழகத்தின் பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, மாநகர் மாவட்டம் என மாவட்டத்திற்க்கு ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.  ஒவ்வொரு பொதுக்கூட்டமும் மாநாடுபோல் நடைபெற வேண்டும்!’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.

வெறுமனே இப்படியான கோரிக்கையும், மாநாடும் மட்டுமே நடத்தும் கட்சியல்ல அதிமுக, அதையும் தாண்டி ஏழை, எளிய, வெள்ளந்தியான மக்களுக்கான கட்சியாகவே 50 ஆண்டுகளாக விளங்கி ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி நிற்கிறது என்பது எத்தனை பேருக்குப் புரியும்?

திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர், அக்கட்சியில் கணக்குக் கேட்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறினார். வெளியேற்றப்பட்டார் என்றெல்லாம் வரலாற்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவரவர் கட்சி அரசியலுக்கேற்ப மாற்றிப் பேசுகிறார்கள். நேற்று நடந்த விஷயங்களை ஈரு பேனாகி, பேனை பெருமாளாக்கி நிற்கையில், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி சிற்றெரும்பாகி போகும்போது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் விஷயத்தில் மட்டும் அது நடக்காமல் இருக்குமா?

இந்த வரலாற்றைப் பேசும் பலரும் ஒரு உண்மையை மறந்து போகிறார்கள். அல்லது மறைத்து விடுகிறார்கள் ஏதோ எம்ஜிஆர் திமுக பொருளாளராக இருந்து கொண்டு திமுக கட்சியில் மட்டும் கணக்குக் கேட்டார். அவருக்குரிய கணக்கை திமுக தலைவரோ, மற்ற நிர்வாகிகளோ தரவில்லை. அந்த அளவுக்கு கட்சி பணத்தை அவரவர் வசதிக்கேற்ப கையாண்டு விட்டார்கள் என்றுதான் மேலோட்டமாக நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. அப்போது ஆட்சிக்கட்டிலிலிருந்த திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி முக்கியப் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் அத்தனை பேரும் தங்களது சொத்தக்கணக்கையும், வருமானக் கணக்கையும் காட்ட வேண்டும் என்பதுதான் எம்ஜிஆர் கோரிய கோரிக்கை. அதற்குத்தான் உடன்பட மறுத்தார்கள்

பொறுப்பில் இருந்தவர்கள். அதன் எதிரொலியாகத்தான் எம்ஜிஆர் வெளியேறினார். அதிமுகவை துவக்கினார் கவர்னரிடம், டெல்லி சென்று ஜனாதிபதியிடம் எல்லாம் தமிழக முதலமைச்சர் முதற்கொண்டு அப்போதைய அமைச்சர்கள்வரை ஊழல் பட்டியலைக் கொடுத்தார். சர்க்காரியா கமிஷன் வந்தது. அதன் முடிவு ஊழல் நடந்துள்ளது. அது விஞ்ஞானப்பூர்வமான ஊழல், சட்டரீதியாக தண்டிக்க முடியாத அளவுக்கு கவனமாக ஊழல் செய்துள்ளார்கள்’ என்ற செய்திகளும் வெளியானது..

ஆக, தமிழ்நாட்டில் ஊழலை முதன் முதலாக கட்சிக்குள்ளேயே அமல்படுத்தத் துணிந்தவர் எம்ஜிஆர். அதற்கான நடவடிக்கையாகவே அவர் தனிக்கட்சி கண்டார் என்பதை அப்போதிருந்த மூத்த கட்சி நிர்வாகிகள் இன்றும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். எம்ஜிஆர் 1977 முதல் 1980 வரை நடத்திய ஆட்சி பொற்கால ஆட்சி என்று சொல்லுவதை விட ஊழலற்ற ஆட்சி என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்.

அப்படியான நேர்மை, செயல்பாடு, வெளிப்படைத் தன்மையில் நடந்த ஆட்சியைத்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து 1980 பாராளுமன்றத் தேர்தலில் அடைந்த வெற்றியில் பூரிப்படைந்து கலைத்தனர். அது இந்தியாவிற்கே தவறான முன்னுதாரணமாகவும் மாறியது. ‘நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் என்னை இப்படி தண்டித்தீர்கள்?’ என்று அடுத்து வந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணீர் மல்கக் கேட்டார் எம்ஜிஆர். கரைந்து உருகுவது எம்ஜிஆர் அல்லவா? நம் மக்கள் தாங்குவார்களா?

நாங்கள் அந்தத் தேர்தலில் கருணாநிதிக்கு ஓட்டுப் போடவில்லை. மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும் என்று எண்ணி காங்கிரஸிற்குத்தான் ஓட்டுப் போட்டோம். அந்தக்கூட்டணியில் இருந்த திமுகவிற்கும் போட்டோம்!’ என்று போகிற இடங்களில் வெளிப்படையாகவே பேசினர். அதன் எதிரொலி சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் மீண்டும் வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை அதிமுகவை திமுகவால் தோற்கடிக்கவே முடியவில்லை.

அந்த அளவுக்கு பலமான சக்தியாக எம்ஜிஆர் விளங்கினார். அதேபோல் காங்கிஸ்-அதிமுக கூட்டணி என்பதை மாறாமல் பின்பற்றினார். தவிர வெறுமனே நேர்மையான, ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்தால் மட்டும் அது பொற்கால ஆட்சியாக நாம் தந்து விட முடியாது. அதை மக்கள் எல்லா நேரங்களிலும் நினைப்பதுமில்லை. மக்களோடு மக்களாக மூல பலமாக இருக்கும் நம் அப்பழுக்கற்ற தொண்டர்களே அதன் அஸ்திவாரம் என்பதை உணர்ந்தார். அவர்களின் சின்னச்சின்ன அபிலாஷைகளை ஒன்று நிறைவேற்றித் தரவேண்டும். அல்லது அவர்களுக்கு, அவர்களே வசதிகள் ஏற்படுத்திக் கொள்கிற விஷயங்களில் நாம் தடைபோடக்கூடாது என்பதை உணர்ந்தார்.

அந்த அடிப்படையிலேயே 1977-80 வரை பூரண மதுவிலக்கு அமல்படுத்தின எம்ஜிஆர் அடுத்த ஆட்சியில் அதை ரத்து செய்தார். சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் தாராளமாக கட்சிக்காரர்கள் கையில் புழங்கியது. ஊழல், முறைகேடு என்பதெல்லாம் இலைமறைவு காய் மறைவாக நடந்த காலம். அப்போதும் சட்டசபையில் அவர் மந்திரி சபை மீது ஊழல் குற்றச்சாட்டை திமுக கூறியபோதெல்லாம், ‘நான் ஊழல் செய்தேனா? என் கரங்கள் கறை படியாதவை!’ என்று உணர்ச்சி பொங்கி முழங்கவும் செய்தார்.

அதோடு நிற்காது கண்முன்னே நடக்கும் ஊழல்கள் மீது நடவடிக்கையும் எடுத்தார். அட்டூழியங்கள், அராஜகங்கள் தலைவிரித்தாடும் இடங்களில் எல்லாம் தன் சாட்டையை சொடுக்கினார். அதற்கு நல்ல உதாரணம் நெகமம் கந்தசாமி, தாமரைக்கனி போன்றோர் மீது அடிக்கடி எடுத்த நடவடிக்கைகளை சொல்லலாம். அநேகமாக எம்ஜிஆர் மறைந்து ஜெயலலிதா அதிமுக தலைவியான பின்பு (பொதுச்செயலாளர்) எம்ஜிஆரின் பிம்பமாகவே திகழ்ந்தார்.

ஆனால் ஊழல் முறைகேடு ஆகிய விஷயங்களில் மந்திரிகள், எம்எல்ஏக்கள் மீது சாட்டையை சொடுக்கியவர், தன்னுடனே இருக்கும் உடன்பிறவா சகோதரி மீதும், அவர்தம் உறவுக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டினார். அதோடு ஜெயலலிதா காலகட்டம் என்பது கோடிகளில் பணம் இல்லாமல் தொகுதிகளில் வெல்ல முடியாத நிலை. அதை மன்னார்குடி குடும்பமே முழுமையாகக் கவனிப்பதாய் நம்பினார். அதனால் இப்படியான விஷயங்களில் நீக்குப் போக்குக் காட்டினார்.

அதில் வளர்ப்பு மகன், ஆடம்பரத் திருமணம் போன்றவை வெகுமக்களால் பேசப்பட்டு 1996-ல் ஆட்சியைப் பிடிப்பதில் தவறினார். ஒரு சிறிய அனுபவமே நிறைய பாடம் கற்பிக்கிறது. இது பெரிய அனுபவம். அதற்குப் பிறகு படு புத்திசாலித்தனமாக நகர்ந்தார். அரசியலில் எதிர்த்து செயல்படுவது கருணாநிதியை. மத்தியில் பாஜகவை, காங்கிரஸை என மாறி மாறி பயணம் செய்தார். இப்படியான சூழல் எம்ஜிஆருக்குக் கூட வாய்த்ததில்லை.

லேடியா, மோடியா என்று கேட்கும் அளவு பிரதமர் பதவியையே குறி வைத்த தமிழகத் தலைவர் ஒருவர் உண்டென்றால் அது ஜெயலலிதாவைத் தவிர ஒருவரும் இருக்க முடியாது. அப்படியான அசுர அரசியலின் முன்பு தமிழகத்தில் திமுக, பாஜகா, காங்கிரஸ் எல்லோமே தவிடு பொடியான சம்பவமும் ஒரு பாராளுமன்றத் தேர்தலில் நடந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் 1989, 1996 ஆகிய இருமுறை மட்டுமே திமுக அருதிப் பெரும்பான்மை ஆட்சியை நடத்தியது. 2006ல் கூட்டணி ஆட்சியையே நடத்தியது. அதற்குப் பிறகு 10 ஆண்டு காலம் திமுக ஆட்சியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்த அளவு திமுக எம்ஜிஆர் காலத்தை விட படு வீக்காக ஆவதற்கு ஜெயலலிதாவின் செயல்பாடுகளும், அரசியல் சாதுர்ய காய் நகர்த்தல்களுமே காரணம். ஒவ்வொரு தேர்தலிலும் பணம் என்பது அங்கம் வகித்ததை மறுக்க முடியாது.

அதற்குப் பிறகு பணமே தேர்தலுக்குப் பிரதானம் என்ற எண்ணத்தை மக்களின் மத்தியில் ஏற்படுத்தியதும் திமுகதான். திருமங்கலம் பார்முலாவில் வாக்குக்கு ரூ. 200 கவர் போட்டு கன்னியமாக பட்டுவாடா செய்யப்பட்டது அதில் அசுர வெற்றியடைந்த திமுக அடுத்தடுத்து வந்த இடைத்தேர்தல்களுக்கும் இதே திருமங்கலம் ஃபார்முலாவைப் பயன்படுத்தியது. 2009 ஆம் ஆண்டில் தொண்டாமுத்தூர், பர்கூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இந்த பணப்பட்டுவாடா அதிகார பலத்தை முன் வைத்தே தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தார் ஜெயலலிதா.

அந்த அளவுக்கு பலஹீனமடைந்து விட்டதாக அதிமுகவை பார்த்து ஏளனச் சிரிப்பு சிரித்த திமுகவினர் 2011 தேர்தலில் அப்படியே வாய்மூடிக் கொண்டனர்.  ஏனென்றால் அப்போது அடைந்த அதிமுக கூட்டணி வெற்றி அப்படி. அதேபோல் 2016 தேர்தல் அதையும் தூக்கி சாப்பிட்டது இங்கே திருமங்கலம் பார்முலா எனக்குத்தான் சொந்தம் என்று திமுக உரிமை கொண்டாடிக் கொள்ள முடியவில்லை. அத்தனையிலும் பணம். அதை யார்தான் பயன்படுத்தவில்லை என்று மக்களே கேள்வி கேட்கும் அளவு வாக்குக்குப் பணம் கரை புரண்டது என்பதை மறுக்க முடியாது.

போர்க்களத்தில் ஒருவன் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானித்துக் கொடுக்கிறான். தேர்தல் எனும் போர்க்களத்திலும் திருமங்கலம் ஃபார்முலா எனும் ஆயுத வித்தையை அதிமுகவை திமுகவே கையில் எடுக்க வைத்தது. அதுதான் 2016 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்பு அதன் தலைவி ஜெயலலிதா இறந்த நிலையிலும், சின்னம்மா என்றழைக்கப்பட்ட சசிகலா சிறைசென்ற பின்பும் கூட நான்கரை ஆண்டு கால ஆட்சியை எதிர்கட்சிக்கு விட்டுக் கொடுக்காமல் ஒருமித்த கருத்துடன் நின்று ஆட்சியாள வைத்தது.

இடையில் நடந்த இடைத்தேர்தலில் கூட திமுக பெரும்பான்மை சீட்டுகள் வென்றிருந்தால் ஆட்சி மாறி, காட்சியும் மாறியிருக்கும். அதற்கும் இடம் கொடாமல் சரி நிகர் சமானமாக களமாடி தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.. தலைவன் இல்லாத மாலுமி போல் தவித்த கப்பலாக நின்ற அதிமுகவை எடப்பாடி பழனிசாமி என்பவர் தாங்குவாரா? வழிநடத்துவாரா என்ற கேள்வியெல்லாம் எழுந்த நிலையில் அவரே மாபெரும் சக்தியான காட்சியும் நடந்தது. அவரிடம் பணிந்து போய் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பைப் பெற்று ஓ.பன்னீர் செல்வத்தை இணைப்பு காணவும் செய்தது.

அதே தன்மையில் 2021 பொதுத்தேர்தலையும் சந்தித்தது. இதோ கட்சி உடைந்து விடும். இரட்டை இலை பறிபோய்விடும். எம்ஜிஆரின் கட்சி சின்னாபின்னமாகி சில்லுச்சில்லாகக் காணாமல் போய் விடும் என்று பேசிப் பேசிப் பார்க்கிறார்கள். அதில் ஒரு அம்மிக்கல்லைக்கூட அசைக்க முடியவில்லை. ஜெயலலிதா காலத்திலும் இல்லாத அளவு வலுவான எதிர்கட்சியாகவும் அமைந்தது. இதற்கிடையே புறப்பட்ட உட்கட்சிப்பூசலில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் இருக்கத்தானே செய்யும்.

அதைத்தான் உச்சபட்ச உயரத்தில் உள்ள எடப்பாடியும் செய்தார். தானும் தலைவன் என்பதில் பலரும் போட்டியிடுவதில் இருவேறு கருத்துக்கு இடம் இருக்க முடயாது. அப்படித்தான் எடப்பாடி முஷ்டி மடக்கி நின்றார். ஓ.பன்னீர்செல்வமோ முஷ்டி மடக்கி சரிக்கு சரி பலம் பார்த்து உட்கட்சித் தேர்தலில் வென்றிருக்க முயற்சி எடுக்க வேண்டும். அவர் முஷ்டி மடக்கத் தயாரில்லை.

ஆனால் இன்னொருவர் காத்திருக்கிறார். அவரோ கடவு கண்ட வழியெல்லாம் நுழைந்து நுழைந்து தொந்தரவாகவே இருக்கிறார். வலுவான சக்தியை முறியடிக்க வேண்டும். அந்த சக்திக்கு எதிரி நமக்கு நண்பன் என்பதுதானே எந்த ஒரு போரிலும் சூட்சுமம். அதைத்தான் பாஜக, திமுக, காங்கிரஸ் என எல்லா கட்சிகளுமே இலைமறைவு காய்மறைவாக அதிமுக விஷயத்திலும் செய்கிறது. அதற்கு துணைபோகும் ஆட்களை ஆட்டுவித்து ஆடுகிறது. அப்போதும் கூட இன்று நின்று நிலைக்கிறது கட்சி.

அது மட்டுமா? எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள், ரெய்டுகள், அத்தனை ரெய்டு, ஊழல் குற்றச்சாட்டிலும் இதோ ஜெயில் அதோ களி ரெடி என்று கூக்குரல்கள் மேடையில் லாவணி பாடுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகாலம் ஆயிற்று. அப்போதும் கூட இன்னமும் ஊழலுக்கான ஊற்றுக்கண்ணை, ஆதாரங்களை பிடிக்க முடியாமல் வெறுமனே வாய்ப்பேச்சு, ரெய்டு நடவடிக்கையை மட்டுமே செய்து நிற்கிறது.

1996-ல் இந்தக் கட்சியையே கைது செய்து சிறையிலடைத்த ஒரு கட்சியால், அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களாய் புறப்பட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.

அதிகபட்சம் ஒன்றுக்குப் பத்து முறை ரெய்டு, அவ்வளவுதான். அப்படியான நெருக்கடிகளிலும் இவர்கள் இப்படிப் பேச துணிச்சல் வேண்டும். அந்த அளவுக்கு தொண்டர் பலமும், மக்கள் செல்வாக்கும் அளிக்க முடியாத கட்சியாக அதிமுக விளங்குவதற்குக் காரணம் இதன் அப்பழுக்கில்லா தொண்டர்கள் கூலித் தொழிலாளர்கள்.

1977-ல் அதிமுக ஆட்சியமைத்தபோது ஒரு கட்சிப் பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இசைக்கப்பட்டது. அது உலகம் சுற்றும் வாலிபன்படத்தில் டைட்டில் வரும் டைட்டில் பாடல் ‘எனது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!’’ என்ற அந்தப் பாடலுக்கு இடையே எம்ஜிஆர் பேசுவார். ‘பாரம் தூக்குவோர், கைவண்டி இழுப்போர். விவசாயக்கூலிகள், பஞ்சாலைத் தொழிலாளர்கள். சலவைத் தொழிலாளிகள், முடிதிருத்துபவர்கள்’ என அத்தனை உழைக்கும் மக்களையும் சொல்லி அவர்களுக்கான ஆட்சியாக இது மலரும் என்பார்.

அப்படி உழைப்பாளிகளுக்கான ஆட்சியாக மட்டுமல்ல, அவர்களுக்கான கட்சியாகவே மாறி விட்டது. சமீபத்தில் கோவையில் எஸ்.பி.வேலுமணி வீடு ரெய்டு நடந்தபோது, ஒரு துருவேறின சைக்கிளில், அழுக்குக்கிழிந்த சட்டையைப் போட்டுக் கொண்டு ஹேண்டில் பாரில் பொரிகடலை, நறுக்கப்பட்ட கேரட், பீட்ரூட், கொத்தமல்லித் தழைகளை வைத்துக் கொண்டு ஒருவர் நின்றிருந்தார்.

‘‘என்ன சார் ஆச்சு. வேலுமணியை அரெஸ்ட் பண்ணீட்டாங்களா?’’ என்று கேட்டார். தெரியலையே என்ற போது, ‘‘அரெஸ்ட் பண்ணக்கூடாது சார். அவர் ரொம்ப நல்லவர். எவ்வளவு சம்பாதிச்சாரோ, என்ன பண்ணினாரோ தெரியாது. எப்போப் போனாலும் எங்க கஷ்டத்தை காது கொடுத்துக் கேட்பார். இருபது வருஷமா எனக்கு கிடைக்காத பட்டாவை அந்த மகராசன்தான் அரசாங்கத்துல பேசி வாங்கித் தந்தார். அதுலதான் என் பொண்டாட்டி புள்ளைக மூணு பொண்ணுக இப்ப பொழைச்சிட்டிருக்கோம்!’ என்றவர் கண்களில் கதகதன்னு தண்ணி.

இப்படியான ஆட்களை இங்கே மட்டுமல்ல, எத்தனையோ ஊர்களில் எத்தனையோ அதிமுக தலைமை மன்றங்களில் கிளை மன்றங்களின் முன்பு காணமுடியும். அதுதான் அதிமுகவின் பலம். அதுதான் இன்றைக்கும் அவர்களை வாழ வைக்கிறது. இன்றைக்கும் கோவைக்கு பொறுப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி வருகிறார் போகிறார். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

வேலுமணி ஆட்சியில் இல்லை. எதிர்கட்சி எம்எல்ஏதான். அவர் வீட்டில் இருக்கும் நாட்களில் எல்லாம் அங்கே திருவிழா கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டம் செந்தில் பாலாஜிக்கு ஏன் வருவதில்லை. வேறென்ன அடிமட்ட மக்களிடம், அடிமட்டத் தொண்டர்களிடம் அணுகுமுறைதான். அதுதான் அதிமுக. அப்படியான கட்சி ஆயிரம் பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். அதன் மீது ஆயிரமாயிரம் ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால் அதன் வேர் எம்ஜிஆர் என்கிற சக்தியிடமிருந்து புறப்பட்டது. உழைக்கும் மக்களை முன்னிறுத்தி புறப்பட்டது.

இதோ இப்போது கட்சியின் பொன்விழா நிறைவை மாநாடு போல் நடத்த வேண்டும் என்று கோரிய கூட்டத்திலும் கூட நிறைந்து தழும்புகிறது கூட்டம்.

இக்கூட்டத்தில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்எல்ஏ, அம்மன் கே. அர்ச்சுணன் எம்எல்ஏ, அமைப்புச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் வி பி. கந்தசாமி எம்எல்ஏ,  இளைஞரணி துணைச் செயலாளர் டிகே.அமுல் கந்தசாமி எம்எல்ஏ, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கேஆர். ஜெயராம் எம்எல்ஏ,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன்,கோ ஆப்டெக்ஸ் வாரியத் தலைவர் ஏ.வெங்கடாசலம், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செம.வேலுசாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓகே.சின்ராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, ஏஎஸ்.மகேஸ்வரி, முன்னாள் எம்பி யு.ஆர்.கிருஷ்ணன், கழக விவசாய பிரிவு நிர்வாகிகள் ஓவிஆர். ராமச்சந்திரன்,  டியூகாஸ் சுப்பையன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் என்கே.செல்வதுரை, என்.எஸ்.கருப்புசாமி, ஜிகே.விஜயகுமார்,பிடி.கந்தசாமி, எஸ்.சாமி, ஆர்.பிரேமா, லதா, சிங்கை முத்து, பீளமேடு துரைசாமி, ஆர்.பார்த்தீபன், சிங்கை வசந்தி, சிங்கை எஸ்.பாலன், மனோகரன்,

ஒன்றிய செயலாளர்கள், விபி.கந்தவேல், ஜி.குமரவேல், அப்புசாமி, கார்த்திக் அப்புசாமி, ஜிகே.சுந்தரம், ஆர்.ஏ.சக்திவேல், பாபு என்கிற திருஞான சம்மந்தம், ஆர்.செந்தில் குமார்,  டிபி.வேலுசாமி, ராஜா, சக்திவேல், மலுமாச்சம்பட்டி எஸ்.சதீஷ்குமார், ஜி.சுப்பிரமணியன், சுகுமார், சேவூர் வேலுச்சாமி, ஜெகதீசன்,  அம்பாள் பழனிச்சாமி, சாய் செந்தில், எம்எஸ்.ராஜ்குமார், ஜீவானந்தம், கேவிஎன்.ஜெயராமன், கோவனூர் துரைசாமி, நகர செயலாளர் மயில் கணேசன்,  கே.சண்முகராஜா, வான்மதி சேட், டிடி.ஆறுமுகசாமி,குருந்தாசலம், பழனிச்சாமி, ஆதவன் பிரகாஷ்,

பகுதி செயலாளர்கள் கே.சிவகுமார், உக்கடம் கணேசன், எம்ஜிஜே.ராஜ்குமார், இலைகடை ஜெயபால், காட்டூர் செல்வராஜ், டிஜே.செல்வகுமார், கே.உலகநாதன், மௌனசாமி, கே.வெள்ளிங்கிரி,  சுபம் மணிகண்டன், சாரமேடு சந்திரசேகர், கனகராஜ், ஜெயகுமார், வெண்தாமரை பாலு, கே.கருப்பையா, நடராஜன், கமலா பிரஸ் ராசு, த.மதனகோபால், வி.குலசேகரன், பிகே.சீனிவாசன்,  லாலி ரோடு விஜய்,  எம்.பெருமாள்சாமி, ஏ.ரபீக், சின்னச்சாமி, வக்கீல் ராஜேந்திரன், வனிதாமணி, உதயகுமார், ராஜேந்திரன், வேலுச்சாமி, மாரிசாமி, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் புரட்சி தம்பி, லீலாவதி உண்ணி, ஏ.நாசர், எஸ்.விஜயகுமார், ம.ரகுபதி, ஆட்டோ அசோக்குமார், லட்சுமி கந்தன், கண்ணம்மாள், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் கே.தாமோதரன், எஸ்.கோபால கிருஷ்ணன், சந்திரசேகர், மாமன்ற உறுப்பினர்கள் ஆர். பிரபாகரன், கோவை புதூர் ரமேஷ்,மற்றும் கோவை புறநகர் தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட நிர்வாகிகள், நகர், ஒன்றிய, பேரூராட்சி, பகுதி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் உள்பட பெரும் படையே மாநாடு போல் திரண்டு நிற்கிறது.

இப்படி எதிர்கட்சியாக நிற்கும் காலத்தில், ஆளுங்கட்சியால் தொடர்ந்த ரெய்டுகள் ஏவி விடப்படும் கட்சியில் இப்படி அணிதிரண்டு நிற்கும் கூட்டத்தை காண முடியுமா? அதுதான் இக்கட்சியின் சிறப்பு. ஆணிவேர்.

KAMALA KANNAN: 92443 17182

scroll to top