பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டு அதிரடி கிளப்பியுள்ளார். திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.1.31 லட்சம் கோடி என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘‘அண்ணாமலையால் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட வெளியிடமுடியவில்லை. அண்ணாமலையை எப்படி இவ்வளவு நாள் போலீஸ் துறையில் வைத்திருந்தார்கள் என வியப்பாக உள்ளது. யார் யார் பெயரில் அவர் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலை இனி தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு செல்ல நேரிடும்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டு அதிரடி கிளப்பியுள்ளார். திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.1.31 லட்சம் கோடி என்று தெரிவித்துள்ளார்.
சீமான் ‘‘திமுக சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடுவாரா?’ என்று கேட்டிருக்கிறார். ‘தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த கட்சியினரின் பட்டியலை நிச்சயம் வெளியிடுவேன்!’ என்று அதற்கும் அர்த்தம் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. ‘இது கூட்டணிக்கே குந்தகம் விளைவிக்கிற செயல்!’ என்கிற கருத்துக்கள் அதிமுக மத்தியில் தற்போது புகைச்சலாக வெளிப்பட்டிருக்கிறது.
அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்துப் பட்டியலை தமிழக மக்கள் எந்த மாதிரி பார்க்கிறார்கள், இது எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும்?
‘‘அண்ணாமலை வெளியிட்டிருப்பது தனிப்பட்டவர்களின் சொத்துப் பட்டியல். அது ஊழல் பட்டியலாக மாற வேண்டுமானால் வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அதன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருப்பதால், வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் அதை செய்யலாம். அதை விட்டு விட்டு வெறுமனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கிற மாதிரி இப்படி சொத்துப் பட்டியல் மட்டும் வெளியிட்டிருப்பது வெறுமனே அரசியல் பரபரப்புக்காகத்தான்!’’ என்றும் கருத்துக்கள் புறப்பட்ட வண்ணம் இருக்கிறது
தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஊழல் குற்றச்சாட்டு என்பது புதிதல்ல.
1975- ஆம் ஆண்டில் தமிழகத்தில் கருணாநிதி அமைச்சரவை மீது மாபெரும் ஊழல் பட்டியலை வாசித்தார் எம்.ஜி.ஆர். கவர்னரிடம் ஊர்வலமாகச் சென்று ஊழல் பட்டியல் மனுவும் கொடுத்தார். அதற்காக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் பின்னே, ‘ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை. ஆனால் இதில் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது!’ என்ற கருத்தை வெளியிட்டார். அதுவே அதிமுக தரப்பில் திமுகவிற்கு எதிரான பிரச்சாரமாகக் கிளம்பியது.
அந்தக் காலகட்டத்தில் ஊழல், அமைச்சர்கள் சொத்து சேர்ப்பு என்பதை புத்தம் புது விஷயமாகவே மக்கள் பார்த்தனர். எம்ஜிஆர் ஊழலை ஒழிக்க வந்த தேவதூதராகவே கருதினர். 1977-ல் எம்ஜிஆர் ஆட்சி அமைய கருணாநிதி மீது கிளப்பிய ஊழல் குற்றச்சாட்டுகளும் ஒரு காரணமாக அமைந்தது. அதன் பிறகு எம்ஜிஆர் ஆட்சியின் மீதும் அடிக்கடி ஊழல் புகார்களை கூறி வந்தார் அடுத்தடுத்து எதிர்கட்சித் தலைவரான கருணாநிதி.
அதை மிகச் சாதுர்யமாக எதிர்கொண்டு வந்த எம்ஜிஆர், தன் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கருணாநிதி தொடுத்தபோது, ‘என் மீது ஊழல் புகார்கள் ஆதாரத்தோடு நிருபித்தால் நான் என் பதவியை ராஜினமா செய்யவும், அரசியலை விட்டே விலகவும் தயார்!’ என்று உணர்ச்சி பொங்க அறிவித்த சம்பவம் கூட நடந்தது. அதன் பின்னே எம்ஜிஆர் இறக்கும் வரை மீது ஊழல்கறையை வீச முடியவில்லை. அதற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா மீது சொத்துக்குவிப்பு வழக்கு, அது நீண்டகாலம் பல்வேறு வழக்கு மன்றத்தில் நடந்தது, ஜெயலலிதா மரணம், சசிகலா மற்றும் அவர் உறவினர்கள் சிறை சென்றது எல்லாம் நாடறியும்.
அதன் பிறகும் கூட மாறி மாறி வந்த ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியில் பல்வேறு ஊழல் புகார்கள் எழுவதும், அடங்குவதும் சகஜமாகவே இருந்து வந்திருக்கிறது.
இது தமிழகத்தில் மட்டுமா? இந்திய அளவிலும் ஊழல்கள் நாட்டை உலுக்கவே செய்துள்ளன. அதில் மத்தியில் ஆட்சியில் பங்கேற்ற தமிழக அரசியல் கட்சிகளின் தலையும் உருண்டிருக்கிறது.
சுவீடன் நாட்டில் உள்ளது போபர்ஸ் நிறுவனம். ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்க 1986-ம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது இந்திய அரசு. ரூ.1,437 கோடி ஒப்பந்தத்தைப் பெற, அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் 64 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தன. இதில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் கிளம்பின. அதன் பின்னே வந்த தேர்தலில் ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அணி தோற்று, விபிசிங் தலைமையிலான ஆட்சி அமைந்தது.
அதன் பின்னே சின்ன சின்ன ஊழல்கள் வந்தாலும், 2007-ம் ஆண்டு உலகையே உலுக்கியது இந்திய அரசாங்கத்தில் நடந்ததாக சொல்லப்பட்டு 2ஜி ஊழல். மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக அப்போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா இருந்தார். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிமம் வழங்கியதில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இதற்காக ஆ.ராசா பதவி விலகிய சம்பவமும் நடந்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ராஜா, கனிமொழி உள்ளிட்ட 19 பேர் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்தது.
இப்படியான ஊழல்களின் வரிசையில் வக்ஃப் வாரிய நில மோசடி, காமன் வெல்த் மாநாட்டில் ஊழல், ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை மோசடி, முத்திரைத் தாள் மோசடி தெல்கி ஊழல். இதில் ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் மட்டும் சுமார் ரூ. 4500 கோடி. தெல்கி முத்திரைத் தாள் ஊழல் என்பது ரூ. 80 ஆயிரம் கோடி.
இது தவிர மன்மோன்சிங் ஆட்சியில் எழுந்த நிலக்கரிச்சுரங்க ஊழல் குற்றச்சாட்டு. அதில் மட்டும் சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் என்று கூறப்பட்டது. மேல் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அடுத்தது சத்யம் நிறுவன ஊழல், கார்கில் போர் வீரர்கள் குடும்பத்தாருக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுத்ததில் நடந்ததாக சொல்லப்பட்ட ஆதர்ஷ் ஊழல், இறந்த வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், பாஜக ஆட்சியி்ல ஹவாலா மோசடி ஊழல்..லல்லு பிரசாத் யாதவ் பேரில் வந்த கால்நடைத் தீவன ஊழல்.. இப்படி வரிசைகட்டி நிற்கும் ஊழல்கள் சமாச்சாரம் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத மாநிலங்களும் இல்லை. கட்சிகளும் இல்லை என்கிற அளவுக்கு ஊழல் வியாபித்து நிற்கிறது. இந்த சூழலில்தான் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு, அது ஊழலில் சம்பாதித்த சொத்தாக குற்றம்சாட்டுகிறார். அதை விட வேடிக்கை தனக்கு மாதந்தோறும் ஆகும் லட்சக்கணக்கான ரூபாய் செலவுகளை நண்பர்களே தருவதாக பட்டியலிட்டுள்ளார். அப்படி நண்பர்கள் ஒரு மாதம் உதவினால் பரவாயில்லை. வருடக்கணக்கில் தொடர்ந்து கார் வாடகை முதற்கொண்டு, பயணச் செலவு வரை எல்லாம் தருகிறார்கள் என்றால் அது ஊழலா, லஞ்சமா, நட்பா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் பலரும். ஆக, இதுவும் வலைத்தளங்களில் வைரலாகப் புறப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே இன்றைக்கு மக்களே ஊழலைக் கேட்டுக் கேட்டு புளித்துப் போய் அமர்ந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் எப்போது ஓட்டுக்குப் பணம் ஆறாய் பாய ஆரம்பித்து விட்டதோ, அப்போதே அரசியல்வாதிகளின் ஊழலை மக்கள் ஏற்றுக் கொண்டது போலத்தான் தெரிகிறது. ‘அவ்வளவு பணம் நம்மளுக்கு கொடுக்கிறாங்களே. அது ஊழல் செய்யாம கொடுக்க முடியுமா?’என்று அதற்கு நியாயம் கற்பிக்கும் கூட்டத்தையும் மூலைக்கு மூலை காண முடிகிறது. இந்த வார்த்தையாடல்கள்தான் ஆயிரம்தான் ஊழல் குற்றச்சாட்டுகள் கிளப்பப்பட்டாலும் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அடுத்தடுத்து திமுக, அதிமுக வெற்றி பெற்றே வந்திருக்கிறது. இப்போது அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பட்டியல் ஊழல்பட்டியல் அல்ல. அதரப்பழசான சொத்துப் பட்டியல். இது தமிழகத்தில் பெரியதொரு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தாது. மீடியாக்களுக்கு ஓரிரு நாள் செய்தி. அவ்வளவே!’’