THE KOVAI HERALD
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரைக் கைதுசெய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம்மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். அதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடைமீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
மேலும், இரண்டு அரசுப் பேருந்துகள்மீது கல் வீசி சேதப்படுத்தப்பட்டன. இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை பொள்ளாச்சி பா.ஜ.க பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசியிருக்கின்றனர்.
அவரது காரையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். மேலும், இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ஆட்டோவையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து குமரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்ற பா.ஜ.க பிரமுகர் காரையும் உடைத்து சேதப்படுத்தினர்.
இதையடுத்து 100அடி சாலையில் அமைந்திருக்கும் பா.ஜ.க ரத்தினபுரி மண்டலத் தலைவர் மோகன்குமார் அலுவலகத்திலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர். தவிர, மேட்டுப்பாளையம் பகுதியில் மதன்குமார், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான பிளைவுட் கடைகளின் ஜன்னல்களை உடைத்து, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற அடுத்தடுத்த சம்பவங்களால், கோவை மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கோவை மாநகரில் மட்டும் நான்கு கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் (ஒரு படைக்கு 100 பேர்) பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
முக்கிய இடங்களில் தொடர்ந்து வாகனத் தணிக்கை நடந்து வருகிறது. அரசியல் கட்சி அலுவலகங்கள், கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதற்காக வெள்ளலூரில் உள்ள அதிவிரைவுப்படை போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக 4 கம்பெனி சிறப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஆத்துப்பாலம் மற்றும் காந்திபுரத்தில் அதிவிரைவுப்படை போலீசார் துப்பாக்கி, கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம் உள்ளிட்டவற்றுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசினார்; ‘‘கோவை மாநகரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஒவ்வொரு சம்பவத்திற்கும் தலா 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மசூதிகளிலும் மதியம் தொழுகை நடந்தது. இதையடுத்து முக்கிய மசூதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஈரோடு ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் டீசல் குண்டு வீசப்பட்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடு என நினைத்து பக்கத்து வீட்டில் கல்வீசி ஜன்னல், கார் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக- கேரள கேந்திர பொறுப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொதுவாகவே சின்ன விஷயமென்றாலும் மதப்பதற்றம் தொற்றிக் கொள்ளும் நகரம் கோவை. கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தது. மக்கள் கொரானா ஊரடங்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் என்ன செய்வது என்று புரியாமல் வெவ்வேறு தொழில்களுக்கு சென்று குடும்பத்தை சீர்படுத்தி வருகின்றனர். தொழில்களும் இப்போதுதான் மூர்ச்சை தெளிந்து எழுந்து நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சம்பவங்கள் கோவையில் கடந்த 1997-98 மதக்கலவரம், தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நினைவூட்டுவதாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்!’’ என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
S.KAMALA KANNAN Ph. 9244319559